தென்கொரியப் பொருளியலை உயர்த்தக்கூடிய வெளிநாட்டுப் பட்டதாரிகள்

2 mins read
2579c655-a9d8-4115-b393-6ba8ec302c01
தென்கொரியாவில் 2024ஆம் ஆண்டு 52,154 வெளிநாட்டு பட்டதாரிகள் வந்தனர் என கொரிய கல்வி மேம்பாட்டு நிலையம் தெரிவித்தது. - படம்: நியூயார்க் டைம்ஸ்

தென்கொரியாவுக்கு கூடுதலாக ஒரு மில்லியன் திறன்மிக்க வெளிநாட்டுப் பட்டதாரிகள் வந்தால் அது அந்நாட்டுக்கு அமெரிக்க டாலர் 100 பில்லியன் (S$128/3 பி.) அளவு பொருளியல் வளர்ச்சி காணும் என்று கூறப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் குறைந்து வரும் ஊழியர் அணியைச் சரிசெய்ய வெளிநாட்டு பட்டதாரிகளை வரவேற்பது தீர்வாக அமையலாம் என ஆய்வு ஒன்று கூறுகிறது.

இந்த ஆய்வு அறிக்கையைக் கொரிய வர்த்தக, தொழில் சபையும் கொரியப் பல்கலைக்கழகப் பொருளியல் துறைப் பேராசிரியருமான கிம் டுக் பா என்பவர் அடங்கிய ஆய்வுக் குழு ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியிட்டது. இதன் தொடர்பில் தென்கொரியாவிலுள்ள 17 நிர்வாக மாவட்டங்களில் வெளிநாட்டுத் திறனாளர்கள் பொருளியலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றிய தரவுகளை ஆராய்ந்தனர். அந்தத் தரவுகள் 2012ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டுவரை சேகரிக்கப்பட்டன.

தென்கொரியப் பொருளியலில் செயல்முனைப்புடன் இருப்போர் எண்ணிக்கையில் ஒரு விழுக்காடு வெளிநாட்டுப் பட்டதாரிகள் சேர்ந்தால் அந்த வட்டாரத்தின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 0.11 விழுக்காடு அதிகரிப்பதை ஆய்வு சுட்டியது.

தென்கொரியாவில் ஜூலை மாதம் மக்கள்தொகை எண்ணிக்கை 51.68 மில்லியன் என அந்நாட்டு புள்ளிவிவரத் துறை கணக்கிட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 29.7 மில்லியன் மக்கள் 15 வயதுக்கும் மேற்பட்டு பணியில் இருப்போர் அல்லது வேலையிடப் பணியை தேடி வருவோர் என்று கூறப்படுகிறது.

இந்த புள்ளிவிவரக் கணக்கு, தரவுகளைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் கணக்கிட்டதில் கூடுதலாக ஒரு மில்லியன் வெளிநாட்டுத் திறனாளர்களின் வருகை மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஏறத்தாழ 6 விழுக்காடு உயர்த்தும் என்று விளக்கம் தரப்படுகிறது.

இந்த 6 விழுக்காடு பொருளியல் வளர்ச்சி கிட்டத்தட்ட 145 டிரில்லியன் வோனை (S$134 பி.) பெற்றுத்தரும் என்று கூறப்பபட்டது. தென்கொரியாவில் தற்பொழுது உள்ள 1.35 வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் 5 மில்லியனாக உயரும் நிலையில் அது தென்கொரியாவுக்கு 361 டிரில்லியன் வோனைப் பெற்றுத்தரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்