மொன்டெரி: மெக்சிகோவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடந்த துனிசியாவுடனான காற்பந்தாட்டத்தில் ஜப்பான் அபார வெற்றி பெற்றது.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டித் தொடரில் நடந்த 1000ஆவது ஆட்டத்தில் துனிசியாவை 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் ஜப்பான் வென்று ‘எஃப்’ பிரிவில் ஹாலந்து அணியுடன் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளது.
அதன்படி, அடுத்த 32 குழுக்களுக்கான சுற்றுக்குத் தகுதிபெரும் வாய்ப்பை ஜப்பான் பிரகாசப்படுத்தியது. இதுவரை ஆடிய இரு ஆட்டங்களில் ஹாலந்து அணியுடன் 2-2 என்ற எண்ணிக்கையில் சமநிலை கண்டுள்ள ஜப்பான் அடுத்து சுவீடனைச் சந்திக்கும்.
அதிர்ச்சிதரும் விதமாக சுவீடன் குழு ஹாலந்திடம் 5-1 என்ற எண்ணிக்கையில் அதே எஃப் பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் படுதோல்வி அடைந்தது. அப்பிரிவில் மூன்றாம் இடத்துக்குப் தள்ளப்பட்ட சுவீடன் கடைசி ஆட்டத்தில் துனிசியாவுடன் விளையாடும்.
ஆடிய இரு ஆட்டங்களில் துனிசியா இதுவரை சுவீடனுடனும் ஜப்பானுடனும் தோல்வி அடைந்துள்ளதால் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற முடியாது.
‘இ’ பிரிவு ஆட்டங்கள்
‘இ’ பிரிவின் இரு ஆட்டங்களில் கனடாவின் டொரொன்டோ நகரில் நடந்த போட்டியில் ஜெர்மனி, ஐவரி கோஸ்ட் குழுவை 2-1 என்ற எண்ணிக்கையில் வென்றது. அதன்படி அப்பிரிவில் முதலிடத்தில் ஆறு புள்ளிகளுடன் ஜெர்மனி அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும்.
அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டி நகரில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் உலகக் காற்பந்து ரசிகர்களின் பரிவைப் பெற்ற குரசாவ் குழு இக்குவடோர் குழுவுடன் 0-0 என்ற எண்ணிக்கையில் சமநிலை கண்டது.
அதன்வழியாக அக்குழு உலகக் கிண்ணப் போட்டி வரலாற்றில் அதன் முதல் புள்ளியைப் பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இக்குவடோர் குழு அதன் கடைசி ஆட்டத்தில் ஜெர்மனியைச் சந்திக்கவுள்ளது.
பிரிவில் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ள ஐவரி கோஸ்ட் குழு குரசாவ் குழுவைச் சந்திக்கவுள்ளது. ‘இ’ பிரிவின் கடைசி ஆட்டத்தில் ஜெர்மனி தவிர்த்து குரசாவ் உட்பட மீதம் உள்ள மூன்று குழுக்களுக்கும் இறுதி ஆட்டத்தில் வென்றால், அடுத்தச் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பு உள்ளது.
இ & எஃப் பிரிவுகளின் இறுதி ஆட்டங்கள் ஜூன் 26 ல் நடைபெறவுள்ளன.

