தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளவரசர் மட்டீன் திருமணத்திற்காக புருணை மண்ணில் உலகத் தலைவர்கள்

2 mins read
40ecd98e-df6d-4b65-8417-8cfa3e70fe35
புருணை தலைநகரான பண்டார் ஸ்ரீ பகவானில் ஜனவரி 14ஆம் தேதியன்று நடைபெற்ற அரச திருமண சடங்கில் இளவரசர் அப்துல் மட்டீன், யாங் முலியா அனிஷா ரோஸ்னா. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

புருணை: புருணை இளவரசர் அப்துல் மட்டீனின் திருமணத்துக்காக நாட்டில் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வரிசையில் ஜனவரி 14ஆம் தேதியன்று ஆசிய, மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அரசாங்கத் தலைவர்களும் அரசக் குடும்பத்தினரும் ஆடம்பரமான அரச திருமணச் சடங்கில் கலந்துகொண்டனர்.

இளவரசர் மட்டீன், 32, சடங்குபூர்வ சீருடையை அணிந்திருக்க, 29 வயது மணப்பெண் யாங் முலியா அனிஷா ரோஸ்னா நீள, வெண்ணிற ஆடையிலும் மினுமினுக்கும் நகைகளிலும் பவனி வந்தார்.

எப்போதும் வெறிச்சோடி காணப்படும் பண்டார் ஸ்ரீ பகவான் தலைநகரம், தம்பதியரின் ஊர்வலத்தால் களைகட்டியது.

திருமண ஊர்வலத்தைக் காண்பதற்காக மக்கள் பலரும் சாலை ஓரங்களில் கூடினர்.
திருமண ஊர்வலத்தைக் காண்பதற்காக மக்கள் பலரும் சாலை ஓரங்களில் கூடினர். - படம்: ஏஎஃப்பி

தம்பதியரைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் கூடினர்.

அரச திருமணச் சடங்குக்கு வருகைபுரிந்த 5,000 விருந்தினர்களில் ஜோர்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள், பஹ்ரேன், பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரசக் குடும்பத்தினர் அடங்குவர் என்று கூறப்படுகிறது.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ, பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் ஆகிய உலகத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

விருந்தினர்கள் மத்தியில் அமர்ந்திருக்கும் பிரதமர் லீ சியன் லூங், அவரின் துணைவியார் ஹோ சிங்.
விருந்தினர்கள் மத்தியில் அமர்ந்திருக்கும் பிரதமர் லீ சியன் லூங், அவரின் துணைவியார் ஹோ சிங். - படம்: தொடர்பு தகவல் அமைச்சு

இவர்களுடன் கலந்துகொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், தம்பதியருக்கு வாழ்த்து கூறியதுடன் திருமணக் கொண்டாட்டத்திற்காக புருணை மண்ணில் தாம் மீண்டும் கால்வைக்க முடிந்ததில் மகிழ்ச்சி கொள்வதாகவும் ஜனவரி 13ஆம் தேதியன்று ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.

புருணை சுல்தான் ஹசானல் போல்கியாவுக்கு இளவரசர் மட்டீன் 10வது பிள்ளை, நான்காவது மகன். அரியணை ஏறும் வாய்ப்பு இவருக்கு அநேகமாக இருக்காது என்று கூறப்படுகிறது.

இருப்பினும், சமூக ஊடகத்தின் பிடியில் வளரும் இளம் தலைமுறையினருடன் எளிதில் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் நவீனத் தோற்றம், அரசக் குடும்பத்தில் இவருக்கு உண்டு என்கின்றனர் சிலர்.

குறிப்புச் சொற்கள்