பல் சிகிச்சையில் பாதரசப் பயன்பாட்டை நிறுத்த உலக நாடுகள் ஒப்புதல்

பல் சிகிச்சையில் பாதரசப் பயன்பாட்டை நிறுத்த உலக நாடுகள் ஒப்புதல்

படம்: கோஸ்டல் டென்டல்

08 Nov 2025 - 5:13 pm

1 mins read

ஜெனீவா: பற்களில் இடைவெளியை நிரப்ப மேற்கொள்ளப்படும் சிகிச்சையில் பாதரசம் பயன்படுத்தப்படுவதை 2034ஆம் ஆண்டுக்குள் நிறுத்த உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

உலகம் முழுவதும் உள்ள பல் சிகிச்சைத் துறையில் கொண்டுவரப்படும் பெரியதொரு மாற்றமாக இது கருதப்படுகிறது.

மனிதர்களின் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதரச மாசிலிருந்து பாதுகாக்க ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டில் உடன்பாடு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

பல் சிகிச்சையில் பாதரசம் அடங்கிய உலோகக் கலவை பயன்படுத்தப்படுவதை 2034க்குள் படிப்படியாக நிறுத்துவது என நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாக, மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பல் மறுசீரமைப்புகளுக்குப் ரசக்கலவையைப் பயன்படுத்துவது கைவிடப்பட்டு, கிடைக்கக்கூடிய குறைந்த நச்சுத்தன்மையுள்ள பொருள்களால் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது பரிந்துரை.

பொது சுகாதாரத்தில் கவலையை ஏற்படுத்தக்கூடிய 10 வேதிப்பொருள்களில் பாதரசமும் ஒன்று என உலக சுகாதார நிறுவனம் கருதுகிறது. மனித சுகாதாரத்திற்குப் பாதரசம் கேடு விளைவிக்கக்கூடியது என்று அது குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஜெனீவாசிகிச்சைஉலக சுகாதார நிறுவனம்மாநாடு