பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் புகைமூட்ட நிலைமை மோசமடைந்து வருவதால் மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளை உடனடியாக மூடுமாறு மலேசியக் கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
பாகாங் மாநிலத்தின் ரொம்பின் வட்டாரப் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் பெர்லிஸ், பேராக், பினாங்கு, சாபா, சரவாக், லபுவான் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் கல்வி அமைச்சர் ஃபாத்லினா சிடேக் தெரிவித்தார். ஜோகூர் மாநிலத்தில் நிலவும் மோசமான காற்றுத் தரம் காரணமாக அங்கு ஏற்கெனவே புதன்கிழமை (அக்டோபர் 7) பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 150 முதல் 180 வரை நீண்ட நேரத்திற்கு நீடித்தால் பள்ளிகளை மூடுமாறு மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் விடுத்த கோரிக்கையை அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பள்ளிகள் வீட்டிலிருந்தே கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநிலக் கல்வித் துறைகளுக்கும் மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இதனைத் தமது ஃபேஸ்புக் பதிவில் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் உரிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், முகக் கவசம் அணிதல், வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுதல் போன்றவற்றைச் சுட்டினார்.
இவ்வேளையில், இந்தோனீசியாவில் இவ்வாண்டு ஏற்பட்டுள்ள காட்டுத்தீ ஆக மோசமானவற்றில் ஒன்று என்றும் இதனால் அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் ஆகியவையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் பிபிசி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
