ஜோகூர் பாரு: வரவிருக்கும் 16வது பொதுத் தேர்தலில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சி குறைந்தது ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளிலேனும் வெற்றிபெற வேண்டும் என்று துணைப் பிரதமரும் தேசிய முன்னணியின் தலைவருமான அகமது ஸாஹித் ஹமிடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜோகூர், மலாக்கா மாநிலத் தேர்தல்களில் மஇகா வெற்றிபெறத் தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு உதவியது என்று அம்னோ தலைவருமான திரு ஸாஹித் குறிப்பிட்டார். அக்கட்சி மேலும் பல நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்ற அந்த ஒத்துழைப்பு தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மஇகாவின் 80வது ஆண்டு மாநாட்டைச் சனிக்கிழமை (நவம்பர் 28) தொடங்கிவைத்துப் பேசிய அவர், முன்பு மஇகா வசம் ஐந்து தொகுதிகள் இருந்ததைப்போல, அடுத்த பொதுத் தேர்தலிலும் அக்கட்சி குறைந்தது ஐந்து தொகுதிகளில் வெல்லும் என நம்புவதாகக் குறிப்பிட்டார்.
மஇகா தலைவர் ச.விக்னேஸ்வரன், மலேசியச் சீனர் சங்கத் தலைவர் வீ கா சியோங், மக்கள் முன்னேற்றக் கட்சித் தலைவர் ஜே.லோக பால மோகன், ஜோகூர் மாநில தேசிய முன்னணித் தலைவர் ஒன் ஹஃபிஸ் காஸி ஆகியோர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மஇகாவுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை அக்கட்சியின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதைத் துணைப் பிரதமருமான திரு ஸாஹிட் ஒப்புக்கொண்டார். ஆயினும், போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெல்ல அதன் தேர்தல் குழு காட்டிய அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார்.
கடந்த 15வது பொதுத் தேர்தலில் பத்து நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட மஇகா, பேராக் மாநிலத்தின் தாப்பா தொகுதியில் மட்டுமே வென்றது. அங்கு அக்கட்சியின் துணைத் தலைவர் எம்.சரவணன் 5,064 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிபெற்றுத் தொகுதியைத் தக்கவைத்தார்.
இதனிடையே, ஜோகூர் முதல்வருமான ஒன் ஹஃபிசுடன் நல்லுறவைப் பேணுமாறு திரு விக்னேஸ்வரனுக்கு திரு ஸாஹிட் ஆலோசனை வழங்கினார். இதன்மூலம், வரும் பொதுத் தேர்தலில் ஜோகூர் மாநிலத்திலுள்ள நாடாளுமன்றத் தொகுதியொன்றில் மஇகா தலைவர் போட்டியிடக்கூடும் என்பதை அவர் சூசகமாக உணர்த்தியதாகச் சொல்லப்படுகிறது.
