வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய கிழக்குத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோர் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியையும் ஐரோப்பியத் தலைவர்களையும் இவ்வாரயிறுதியில் பெர்லினில் சந்திப்பர்.
அக்கூட்டம் பெர்லினில் நடக்கும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ‘த வால் ஸ்திரீட்’ சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14), திங்கட்கிழமை (டிசம்பர் 15) ஆகிய இரு நாள்களில் பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்களையும் திரு விட்காஃப் சந்திப்பார் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
அமெரிக்கா முன்மொழிந்த அமைதி திட்டம் குறித்து உக்ரேனிய அதிபரின் கருத்தைப் பெறவே உக்ரேன்-ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய திரு விட்காஃப் இச்சந்திப்புக்கு அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.
பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரோன், பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர், ஜெர்மானியப் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக ‘த வால் ஸ்திரீட்’ கூறியது.

