வரலாற்றுச் சிறப்புமிக்க மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியக் காற்பந்துப் போட்டியை முதன்முதலாகப் பார்த்த தர்ஷினி குணசீலன், அந்த விளையாட்டின்பால் வெகுவாக ஈர்க்கப்பட்டார்.
“விறுவிறுப்பான அந்தப் போட்டிக்களத்தில் துடிப்புடன் கூடிய உற்சாகத்தை உணர்ந்தேன்,” என்று அவர் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் ஈராண்டு காலம் இருந்தபோது இந்த விளையாட்டைத் தாம் கற்றுக்கொண்டதாக ‘வோம்பேட்ஸ்’ அணியைச் சேர்ந்த விளையாட்டளர் தர்ஷினி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியக் காற்பந்து, உருண்டையாக இல்லாமல் முட்டை வடிவில் இருக்கும். ஆடப்படும் திடலும் முட்டை வடிவத்தில் இருக்கும். ஆட்டம் 80 நிமிடங்களுக்கு நீடிக்கும்.
ஆஸ்திரேலிய சமூகக் கலாசாரத்திலும் வாழ்வியலிலும் பின்னிப் பிணைந்துள்ள இந்த விளையாட்டை, ஒரு சிங்கப்பூரராகக் கற்றுக்கொள்ளும் அனுபவம் மாறுபட்டது என்றார் அவர்.
ஆஸ்திரேலியக் காற்பந்து லீக் போட்டியில் சிங்கப்பூர் அணியான ‘வோம்பெட்ஸ்’ அண்மையில் சாதித்தது. ஆகஸ்ட் 31ஆம் தேதி ‘வோம்பெட்ஸ்’ ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி தாய்லாந்தில் களம் புகுந்தன.
ஹாங்காங், தாய்லாந்து, சீனா, மலேசியா ஆகிய அணிகளை எதிர்கொண்டு சிங்கப்பூரின் ஆண்கள் அணியினர் இறுதியில் 20 புள்ளிகளைப் பெற்று வாகை சூடினர்.
பெண்கள் அணியினர், தங்கள் பங்கிற்கு ஹாங்காங், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனீசிய அணியினரை வீழ்த்தி வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் இந்த விளையாட்டில் ஈடுபடத் தொடங்கியபோது சற்று சிரமப்பட்டதாக தர்ஷினி கூறினார்.
“நான் துறுதுறுவென்று துடிப்புடன் இருப்பவள்தான். என்றாலும் இந்தப் புதிய விளையாட்டு எனக்குச் சற்று தீவிரமாக இருந்தது. பழகிக்கொள்ள சில காலம் எடுத்தேன்,” என்று அவர் கூறினார்.
“இருந்தபோதும் எனக்குப் பக்கபலமாகத் துணை நிற்கும் அணி உறுப்பினர்களால் சிரமம் குறைந்துள்ளது. சிங்கப்பூரைப் பிரதிநிதித்து விளையாடுபவர்களில் ஆஸ்திரேலியர்கள், அயர்லாந்தினர், பிரிட்டானியர், அமெரிக்கர்கள், ஜப்பானியர்கள், மலேசியர்கள், இந்தோனீசியர்கள் ஆகியோர் அடங்குவர்,” என்று அவர் கூறினார்.
இந்தக் கலாசார பன்முகத்தன்மையே அணிக்கு வலு சேர்ப்பதாகக் கூறினார்.
“ஒவ்வொருவரின் வாழ்க்கை அணுகுமுறையும் எண்ணங்களும் மாறுபட்டிருக்கும். இருந்தபோதும் அனைவரும் உறவாடி, சிரித்துக்கொண்டு ஆதரவாக உள்ளனர்,” என்றார் தர்ஷினி.
சிறிய விளையாட்டுக் குழுவாக உள்ள தங்களுக்கு ஆதரவு நல்கிவரும் அமைப்புகளுக்கு நன்றி செலுத்த விரும்பிய தர்ஷினி, குறிப்பாக அமைப்புகளின் நிதி ஆதரவால் செலவு பற்றிய கவலை இன்றி விளையாட்டு உபகரணங்கள், பயிற்சி செலவு, வெளிநாட்டுப் பயணச் செலவு போன்றவற்றைச் சமாளிக்க முடிவதாகக் குறிப்பிட்டார்.
தாம் பெறும் மகிழ்ச்சியை மற்ற இளையர்களும் பெறவேண்டும் என்று விரும்பும் தர்ஷினி, தங்கள் அணியில் சேரும்படி ஆர்வமுள்ளோரை வரவேற்பதாகக் கூறுகிறார்.

