இவ்வாண்டு சிங்கப்பூரில் நடந்த எஃப்1 கார்பந்தயப் போட்டிகளில் கார்ப்பந்தய அதிகாரிகளாகத் தொண்டாற்றியுள்ளனர் ரக்ஷினி முருகையன், சிவா.
துறைகள் வெவ்வேறாயினும் இருவரின் நாட்டமும் ஒன்றே. இருவரும் முன்பு காற்பந்து நடுவர்களாக இருந்தவர்கள். இருவரும் விளையாட்டின்மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இன்று இருவரும் எஃப்1 கார்பந்தயத்தில் தொண்டூழியர்களாகத் தாம் கனவிலும் நினைக்காத அனுபவங்களைப் பெற்றுள்ளனர்.
ஒரேயொரு வாரயிறுதிதான் ‘எஃப்1’ போட்டி நடக்கும் என்றாலும் அவர்களுக்கு அது அவ்வளவு குறுகியப் பயணமல்ல. எதிர்பாரா சம்பவம் என்ன நடந்தாலும் அதனை உடனே கையாள்வதற்காக ஆண்டு முழுவதும் பற்பல பயிற்சிகளுக்கு அவர்கள் செல்லவேண்டியுள்ளது.
2016ஆம் ஆண்டிலேயே எஃப்1ல் தொண்டாற்றப் பதிவாகினார், கணக்காய்வாளராகப் பணியாற்றிவரும் ரக்ஷினி, 29.
எஃப்1ஐ நேரடியாகக் காண்பது, அவரது கனவு நனவான தருணம்.
தன் குடும்பத்திலேயே ஒரே எஃப்1 தீவிர ரசிகர் ரக்ஷினிதான். மாணவராக இருந்தபோது, நுழைவுச்சீட்டுக் கட்டணம் தன் வரம்புக்கு மீறியதாக இருந்தது. குடும்பத்தாரையும் தொந்தரவுசெய்ய அவர் விரும்பவில்லை.
“அதனால் இவ்வாய்ப்பை இணையத்தில் கண்டதும் உடனே கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்,” என்றார் ரக்ஷினி.
பந்தயத்தின் ‘கண்கள்’
சேர்ந்ததிலிருந்து பெரும்பாலான ஆண்டுகளில் ரக்ஷினி ‘ரேடியோ மார்ஷல்’லாகத் தொண்டாற்றியுள்ளார். அதாவது, தான் பார்த்துக்கொள்ளும் பகுதியில் ஏதேனும் நிகழ்ந்தால் கார்பந்தயத்தை நிர்வகிப்போரிடம் (track control) உடனே சொல்வதே அவரின் பொறுப்பாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஈராண்டுகளாக, பிரிவுத் தலைவராவதற்கான பயிற்சியை ரக்ஷினி மேற்கொண்டுவருகிறார். இந்த ஈராண்டுப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தால் அடுத்த ஆண்டுமுதல் அவர் பிரிவுத் தலைவராகப் பொறுப்பேற்கக்கூடும்.
பிரிவுத் தலைவராக, தன் பிரிவிலுள்ள அதிகாரிகளை (marshals) நிர்வகித்து அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது ரக்ஷினியின் கடமை. பந்தயத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பிரிவுத் தலைவர் இருப்பார்.
“பிரிவுத் தலைவராகும் பயிற்சி சற்று வேறுபட்ட அனுபவம். பந்தயத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று பல்வகையான தொண்டூழியர்களைச் சந்திக்கமுடியும். அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, நான் பிரிவுத் தலைவராக இன்னும் என்னென்ன மேம்பாடுகள் கொண்டுவரலாம் என சிந்தித்தேன்,” என்றார் ரக்ஷினி.
அவசர நிலையைக் கையாளும் தீயணைப்புப் பணி
பந்தயத் தடத்தில் தீ மூண்டால், உடனடியாக 9 கிலோகிராம் தீயணைப்பானை ஏந்தியபடி விரைந்து சென்று தீயணைப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் அதைச் செய்வதற்கே பயிற்சிபெற்றுள்ளார் சிவா, 46.
அரசாங்கத் துறையில் பணியாற்றும் திரு சிவா, 2022ஆம் ஆண்டு எஃப்1ல் சேர்ந்ததிலிருந்தே ‘தீயணைப்பு மார்ஷல்’லாகத் தொண்டாற்றிவந்துள்ளார்.
சம்பவத்தின் தேவைக்கேற்ப, மூன்று வகையான தீயணைப்பான்களில் ஒன்றை ஏந்தி தீயணைக்க அவர் என்றும் தயார்நிலையில் உள்ளார்.
தன் பணியிடத்தில், முதலுதவி, தீயணைப்புப் பயிற்சியும் சான்றிதழ்களும் பெற்றுள்ளதால் சிவா இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
“இந்த அணிக்குள் நுழைவது சுலபமல்ல; ஆனால் ஒரு நண்பர் எனக்கு வழிகாட்டி உதவினார்.
“இந்த அணியில் இருப்பதன்மூலம் நான் எப்படி அவசர நிலையிலும் நிதானமாக இருப்பது எனக் கற்றுக்கொண்டேன். தீயணைப்புக்கான முழு கவசத்துடன் கார்பந்தயம் முடியும்வரை நிற்பது எப்போதும் எனக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது,” என்றார் சிவா.
இம்முறை கார்பந்தயத்தின் வெற்றிக் கோட்டின் அருகில் இருந்தார் சிவா. அதனால், இவ்வாண்டின் வெற்றியாளர் ஜார்ஜ் ரசல் காருக்குள் ஏறுவதற்கு முன் அவரைக் காணமுடிந்தது. “நான் ஃபெராரி ரசிகர். ஃபெராரி ஓட்டுநர்கள் கார் ஓட்டுவதை அருகிலிருந்து காண்பதும் அரிய வாய்ப்பாக இருந்தது,” என்றார் சிவா.
கார்கள் பந்தயத்தைத் தொடங்கும்போதும் வெற்றிக் கோட்டைக் கடக்கும்போதும் அருகிலிருந்து காணும் வாய்ப்பு, இவ்வாண்டு தன் எஃப்1 பந்தய அனுபவத்தை ஒருபடி மேல் மெருகேற்றியதாகக் கூறினார் சிவா.

