ஹலிமா யாக்கோப் இளையர் விருது (Halimah Yacob Youth Award) அதன் 2024/2025 பிரிவைச் சேர்ந்த 11 இளையர்களின் சாதனைகளைக் கொண்டாடியதோடு, 2025/2026 பிரிவுக்கான விருது பெறும் ஒன்பது பேரையும் சனிக்கிழமை (நவம்பர் 8) வரவேற்றது.
இந்த விழாவில் சிங்கப்பூரின் முன்னாள் அதிபரும் சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழக வேந்தருமான ஹலிமா யாக்கோப்பும் தகவல் மின்னிலக்க மேம்பாட்டு, சுகாதார அமைச்சுகளின் துணையமைச்சரான ரஹாயு மஹ்ஸாமும் கலந்துகொண்டனர்.
வழிகாட்டுதல், சமூக ஈடுபாடு, நேரடி அனுபவம் ஆகியவற்றின் மூலம் குறிக்கோள் சார்ந்த தலைமைத்துவத்தை வளர்ப்பதை ஹலிமா யாக்கோப் இளையர் விருது நோக்கமாகக் கொண்டுள்ளன.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்டியூ) உயிரியல் அறிவியல் படித்துக்கொண்டிருக்கும் 24 வயது சுந்தர கணபதி கடந்த ஆண்டு அந்த விருது பெற்றவர்களில் ஒருவர் ஆவார்.
என்டியூ நலப்பணிகள் மன்றத்தின் தலைவராகச் செயல்பட்ட அவர், பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த இளையர்களுக்கு ஆதரவு அளித்து, ஏழு இளையோர் நிலையங்களில் 120க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களை வழிநடத்தியுள்ளார்.
ஹலிமா யாக்கோப் இளையர் விருது திட்டத்தின் வழியாக, சுந்தர கணபதி ‘பாலிக் கம்போங்’ (Balik Kampung) நிகழ்ச்சிகளில் ஈடுபட்டார். இது பாரம்பரிய சிங்கப்பூர் விளையாட்டுகளின் மூலம் தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பை ஊக்குவித்தது.
மேலும், அவர் வழிநடத்திய புக்கிட் பாத்தோக் ஈஸ்ட்டின் ‘கேர்ஸ்’ திட்டம் (Project CARES), அவரது முன்னாள் உயர்நிலைப்பள்ளியுடன் இணைந்து வெளிநாட்டு ஊழியர்களையும் மாணவர்களையும் கிரிக்கெட் போட்டியின் மூலம் ஒன்றாக இணைத்தது. தமது அனுபவத்தைப் பகிர்ந்த அவர், “இளையர்களுடன் நான் செலவிட்ட குறுகிய காலம் உண்மையில் அவர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல் நான் உணர்ந்தேன். தேவையில் இருப்போருக்கு மேலும் ஆதரவளிக்க என்னால் செய்யக்கூடியதை இன்னும் மேம்பட்ட விதத்தில் செய்ய ஊக்கமளித்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.
சமூக சேவை என்பது அனுதாபம், ஒத்துழைப்பு, அர்த்தமுள்ள தாக்கத்தின் அடிப்படையில் தொடரும் பயணம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சுந்தர கணபதி, புதிய ஹலிமா யாக்கோப் இளையர் விருது பெறுபவர்களுக்கு வழிகாட்டியாகவும் புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் இளையோர் கட்டமைப்பின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

