சிங்கப்பூர் இந்திய இசை, பாடகர் குழு, அதன் 40வது ஆண்டை எட்டியுள்ள நிலையில் அதன் இளையர் பிரிவு இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
பார்வையாளர்களை 37 இளையர்கள் ஒன்றிணைந்து இசைமழையில் நனைய வைத்தனர்.
‘ஃபெஸ்டிவ் ஃபியெஸ்தா’ என்ற இந்த நிகழ்ச்சியில் 12 வயதுக்கும் 22 வயதுக்கும் உட்பட்ட இளையர்கள் பாடல்கள் பாடி, வீணை, வயலின், விசைப்பலகை, மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளை வாசித்தனர்.
அதோடு, பொங்கல் பண்டிகையையும் சீனப் புத்தாண்டையும் முன்னிட்டு வேற்று இனங்களைச் சேர்ந்த எண்மர் வாசித்த இசை, பாரம்பரிய இந்திய இசையுடன் கலந்து செவிகளுக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு விருந்தாக அமைந்தது.
சிங்கப்பூர் இந்திய இசை, பாடகர் குழுவின் இளையர் பிரிவு இரண்டாவது முறையாக இது போன்ற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியைப் படைத்துள்ளது.
‘நமது தெம்பனிஸ் மையத்’தில் அமைந்துள்ள அரங்கத்தில் ஜனவரி 11ஆம் தேதி இடம்பெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க ஏராளமானோர் வந்திருந்தனர்.
கடினமான பாடல்களைத் தேர்வு செய்து அவற்றுக்குத் தகுந்தவாறு இசையமைத்தது சவால்மிக்கதாக இருந்தாலும் இளையர்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு மிகச் சிறப்பாக அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தனர்.
சிங்கப்பூர் இந்திய இசை, பாடகர் குழுவின் நிறுவனர் திருவாட்டி லலிதா வைத்தியநாதன், இசை பயிற்றுவிப்பாளர் விக்னேஸ்வரி வடிவழகன், பயிற்சி பயிற்றுவிப்பாளர் திரிபுரசுந்தரி சாய்பிரசாத் ஆகியோர் முன்னின்று இசை நிகழ்ச்சியை வழிநடத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
இளையர் பிரிவை சேர்ந்த இசைக்கலைஞர் ஈஷா கிருஷ்ணன் இசையமைத்த ‘ஸ்வர லீலா’ எனும் பாடல், நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக அமைந்தது.
ஸ்வர லீலா எனும் பாடலுக்கு ஈஷாவுடன் மேலும் இரண்டு இசைக் கலைஞர்கள் இணைந்து தாள வாத்திய இசையமைத்திருந்தனர்.
பொங்கல் பண்டிகையின் அடையாளமாக ‘நல்ல காலம்’ பாடல், சிங்கப்பூர் மரபை எடுத்துக் கூறும் பிரபல மலாய், சீனப் பாடல்கள் ஆகியவையும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
“கடந்த எட்டு ஆண்டுகளாக நான் வயலின் கற்று வருகிறேன். ஓர் இளம் இசையமைப்பாளராக இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாவதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது,” என்று ஈஷா கிருஷ்ணன், 16, கூறினார்.
“இளையர்கள் ஆர்வத்துடன் முன்வந்து அடுத்தடுத்த தலைமுறையினருக்கு சிங்கப்பூர் இந்திய இசை, பாடகர் குழுவின் சிறப்பைக் கொண்டு செல்வார்கள் என்று நம்புகிறேன்,” என்று திருவாட்டி லலிதா வைத்தியநாதன், 75, சொன்னார்.


