தேசிய இளையர் தொழில்நுட்பப் போட்டியின் இறுதிச் சுற்றில் மாணவர்களின் செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல் திறன்கள் உயர்ந்த அளவில் சோதிக்கப்பட்டன.
மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டி, இதுவரை இல்லாத வகையில் ஆகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடு முழுவதும் 67 உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து 320க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இம்முறை புதிதாக அறிமுகமான சவாலில், முற்றிலும் தானியக்க முறையில் செயல்பட வேண்டிய ஆளில்லா வானூர்திகள், தரையிலே நகரும் இயந்திர மனிதர்களின் மூலமாக அணிகளின் தொழில்நுட்பத் திறன்கள் சோதிக்கப்பட்டன.
ஜூலை 18ஆம் தேதி நடைபெற்ற இறுதிச் சுற்றில் மொத்தம் 12 அணிகள் போட்டியிட்டன. அவற்றில், நீ ஆன் உயர்நிலைப் பள்ளியும் டன்மன் உயர்நிலைப் பள்ளியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. கடுமையான போட்டிக்குப் பிறகு, நீ ஆன் உயர்நிலைப் பள்ளி அணி வாகை சூடியது. டன்மன் பள்ளி இரண்டாமிடம் பிடித்தது.
இறுதிப் போட்டியாளர்களுக்கான வெற்றி விழாவிலும் பரிசு வழங்கும் நிகழ்விலும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதில் 500க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டு மாணவர்களின் தொழில்நுட்பத் திறன்களைக் கொண்டாடினர்.
“மின்னிலக்கத் தொழில்நுட்பம் மூலம் சிங்கப்பூருக்கு நாம் செய்யக்கூடிய நன்மைகள் ஏராளம். இந்தப் போட்டி உங்களுக்கு மிகவும் பலனளிக்கும் அனுபவமாக மட்டுமல்லாமல், சிங்கப்பூருக்கு பங்களிக்க பல வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று நம்புகிறேன்,” என்று அமைச்சர் மாணவர்களிடம் கூறினார்.
தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம், கூகல் கிளவுட் நிறுவனம் இணைந்து, சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆதரவோடு மார்ச் முதல் ஜூலை வரை உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இப்போட்டியை நடத்தின.
இதில் பங்கேற்ற மாணவர்கள் ஆறு வாரத் தீவிர பயிற்சித் திட்டத்தில் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவு, பைத்தான் நிரல்மொழி, இயந்திரவியல் தொடர்பான 42 மணி நேரச் செய்முறைப் பயிற்சியைப் பெற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இப்போட்டியில் கலந்துகொண்டது தனது பழைய ஆர்வத்தை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்ததாக டன்மன் உயர்நிலைப் பள்ளி அணியைச் சேர்ந்த 15 வயது நேயன் சர்வேஷ் கூறினார்.
“தொடக்கப் பள்ளியில் பயின்றபோது, என் அப்பா எனக்காக ஒரு ‘ராஸ்பெர்ரி பை’ கருவியை வாங்கி கொடுத்தார். அதுவே எனது குறியீட்டுப் பயணத்தின் தொடக்கமாக இருந்தது. ஆனால், பாடங்களில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் அந்த ஆர்வத்தைத் தொடர முடியவில்லை. இந்தப் போட்டி, குறிமுறையாக்கத்தின் அற்புதங்களையும் அதை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதையும் எனக்கு மீண்டும் நினைவுபடுத்தியது,” என்றார் அவர்.
தங்களது அணி இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தாலும், இந்த அனுபவத்தையே ஒரு பெரிய வெற்றியாக நேயன் கருதுகிறார்.
“இதுபோன்ற போட்டியில் நாங்கள் பங்கேற்றது இதுவே முதன்முறை. மன அழுத்தத்தைச் சமாளிக்கக் கற்றுக்கொண்டேன். குழுவாகவும் தெளிவாகவும் தொடர்புகொள்வது, வெவ்வேறு இயல்புடைய நண்பர்களுடன் ஒத்துழைப்பது போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.
அணியின் மற்றொரு உறுப்பினரான 16 வயது தீபிகா ராம்குமார், புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட நினைத்து இப்போட்டியில் கலந்துகொண்டதாகக் கூறினார். இவ்வாண்டு மட்டும் ஏழு பலதுறைப் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், இப்போட்டிக்குப் பிறகு தொழில்நுட்பத் துறையில் தமக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்.
“இயந்திரவியலில் எனக்குப் பெரிதாக அனுபவமில்லை. குறிப்பாக, குறிமுறையாக்கத்தைப் பயன்படுத்தி ஓர் இயந்திரத்தை இயக்குவது என் வாழ்க்கையில் இதுவே முதன்முறை. இந்த அனுபவம் தொழில்நுட்பத்தின்மீதான எனது பார்வையையே மாற்றியுள்ளது,” என்றார் தீபிகா.
ஏழாவது இடத்தைப் பெற்ற நார்த் விஸ்தா உயர்நிலைப் பள்ளி அணியின் தலைவரான மெராலா ரோஹித், 15, பத்து வயதிலேயே குறிமுறையாக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
“மற்ற அணிகளில் ஐந்து பேர் இருந்தனர். ஆனால், எங்கள் அணியில் மூன்று பேர்தான். இதனால், மிகத் துல்லியமான திட்டமிடலும், அதைவிட வேகமான செயல்பாடுகளும் நாங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் கூகல் கிளவுட் நிறுவனமும் வழங்கிய பயிற்சியும் வழிகாட்டுதலும் எங்களுக்குப் பேராதரவாக இருந்தன,” என்று அவர் கூறினார்.
எட்டாவது இடத்தைப் பிடித்த யூசோப் இஷாக் பள்ளியைச் சேர்ந்த தினாத் மோவிந்து குணசேகரா, 14, குறிமுறையாக்கத்தைச் சிறுவயதில் தானாகவே கற்றுக்கொண்டவர்.
“தகுதிச் சுற்றில் எங்களது நிறமறியும் (colour-sensing) அமைப்பு செயலிழந்துவிட்டது. இந்தப் போட்டியில் எங்கள் பள்ளி முதன்முறையாகப் பங்கேற்றதால், முன்னைய அனுபவமோ வழிகாட்டலோ எங்களிடம் எதுவும் இல்லை. எனவே, எல்லாவற்றையும் நாங்களே சோதித்துப் பார்த்து, கற்றுக்கொண்டு முன்னேற வேண்டியிருந்தது. அந்த விடாமுயற்சியும் மீள்திறனும்தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாடம்,” என்றார் தினாத்.
இப்போது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, சமூக நலனுக்கான கருவிகளை உருவாக்குவதைப் பற்றிக் கற்பனை செய்யத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.