தனது தொடக்கப்பள்ளி வாலிபால் அணியில் சேர்ந்தது ஜெகன் ஸ்ரீசாய்நாத்தின் சொந்த விருப்பத்தாலன்று.
அவரது அண்ணன் ஏற்கெனவே பள்ளி அணியில் இருந்ததால், அவரது தாயார் ஜெகனையும் அதே பாதையில் பின்தொடர ஊக்கப்படுத்தினார். ஆரம்பத்தில் வாலிபால்மீது பெரிதாக ஆர்வம் இல்லாத ஜெகனின் வாழ்க்கையில் அது விரைவில் மிகவும் முக்கியமான பகுதியாக மாறியது.
தொடக்கப்பள்ளிக்குப் பிறகு, வாலிபாலில் தனது திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள, வலுவான விளையாட்டுத் திட்டங்களைக் கொண்ட செயிண்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளியில் சேருமாறு ஜெகனை அவரது பயிற்றுவிப்பாளர் ஊக்குவித்தார். அங்கு அவர் பல்வேறு அனுபவங்களைப் பெற்று தனது தன்னம்பிக்கையை மேன்மேலும் வளர்த்துக்கொண்டார்.
தற்போது தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மின்னணுப் பொறியியல் பட்டயம் படித்துக்கொண்டிருக்கிறார் 21 வயது ஜெகன்.
ஆரம்பத்தில் கடினமான விளையாட்டுப் பயிற்சிகளைப் படிப்புடன் சமப்படுத்தி சமாளிப்பது சவாலாக இருந்தாலும் சரியான வழிகாட்டுதல்கள், நேர்மையான சுய மதிப்பீடுமூலம், அவர் தனது நேர மேலாண்மையையும் தலைமைத்துவத் திறன்களையும் மேம்படுத்திக்கொண்டார். ஒவ்வொரு வாலிபால் போட்டியிலும் தனக்கு ஆதரவாக தனது குடும்பத்தினர் கலந்துகொள்வார்கள் என்றும் ஜெகன் சொன்னார்.
“இந்த விளையாட்டின்மூலம் நான் என்னைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் போன்ற அனுபவம் மிக்க அணிகளுக்கு எதிராக நடைபெற்ற கடினமான போட்டிகளை நினைவுகூர்ந்த ஜெகன், விளையாட்டின் கணிக்க முடியாத தன்மையைச் சுட்டினார்.
“வாலிபால் எங்களுக்குப் பல அனுபவங்களைத் தந்துள்ளது. பந்து உருண்டையானது என்பதால் எதுவும் நடக்கலாம். நாங்கள் தோல்வியடையப் போகிறோம் என்று நினைத்த போட்டிகளை வென்றிருக்கிறோம். அதேபோல், நிச்சயம் வெற்றிபெறப் போகிறோம் என்று நினைத்த சில போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளோம்.
தொடர்புடைய செய்திகள்
“ஆணவம் கொள்ளக்கூடாது என்பதையும் எப்போதும் நிலைத்த மனப்பாங்குடன் இருக்க வேண்டும் என்பதையும் இது கற்றுத் தருகிறது,” என்று ஜெகன் கூறினார்.
வாலிபால் விளையாட்டின் மூலம் அவருக்குத் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, பலதுறைத் தொழிற்கல்லூரி முதலியவற்றில் மூத்த, இளைய விளையாட்டாளர்களுடனும் சகாக்களுடனும் நட்பை வளர்க்கும் வாய்ப்பைத் தந்ததாக ஜெகன் கூறினார்.
“எங்களில் யாராவது ஒருவர் தளர்ந்தால், முழு அணியும் அவருக்கு உதவி செய்ய ஒன்றுகூடும். எனது மிக நெருக்கமான நண்பர்களை நான் இந்த விளையாட்டின்வழிதான் சந்தித்தேன்,” என்றார் அவர்.
ஜெகனின் தலைமையில், தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் ஆண்கள் வாலிபால் அணி 2022 முதல் 2024 வரை தொடர்ச்சியாக மூன்று பலதுறைத் தொழிற்கல்லூரி-தொழில்நுட்பக் கல்விக் கழகம் போட்டிகளில் வாகை சூடியது. மேலும், 2023 முதல் 2024 வரை உயர்கல்வி நிலையங்களுக்கு இடையே ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும் அவரது அணி பெற்றது.
உயர்நிலைப்பள்ளியில் வாலிபால் அணியின் தலைவராக இருந்ததைவிட, வெவ்வேறு உயர்நிலைப்பள்ளிகளிலிருந்து வந்த சற்று மூத்த விளையாட்டாளர்களுடன் கூடிய பலதுறைத் தொழிற்கல்லூரி அணியை வழிநடத்துவதற்கு முற்றிலும் மாறான அணுகுமுறை தேவைப்பட்டதாக ஜெகன் கூறினார்.
“எனது பயிற்றுவிப்பாளர்களும் இணைப்பாட நடவடிக்கை பொறுப்பாசிரியர்களும் எனக்கு தொடர் வழிகாட்டுதலையும் வளர்ச்சிக்கான சுதந்திரத்தையும் வழங்கினர்.
தவறுகள் செய்து கற்றுக்கொள்வதற்கும் என் அணிக்கு நல்ல தலைவராக உயர்வதற்கும் பல வாய்ப்புகளை அளித்தனர்,” என்ற ஜெகன், அவர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
இன்று, ஜெகன் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியிலும் தனது முன்னாள் உயர்நிலைப்பள்ளியிலும் இளம் வாலிபால் விளையாட்டாளர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.
“அடுத்த தலைமுறை விளையாட்டாளர்களும் எனக்கு கிடைத்த அதே வழிகாட்டுதலும் ஆதரவும் பெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். சில நேரங்களில், தாங்கள் செய்வது சரியா தவறா என்று தெரியாமல் சிலர் தடைபடுகிறார்கள். அவர்களின் வளர்ச்சிக்கு நான் உதவ விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
அண்மையில், தனது தலைமைத்துவம், வழிகாட்டுதல், பலதுறைத் தொழிற்கல்லூரியில் சிறந்த செயல்திறன் முதலியவற்றுக்காக விளையாட்டு வீரர் உன்னத விருதை ‘தெமாசெக் மாணவர் உன்னத விருதுகள்’ வழங்கும் நிகழ்ச்சியில் பெற்றார்.
“இது எனக்குக் கிடைத்த தனிப்பட்ட விருதாக இருந்தாலும், இதற்கு என் வாலிபால் அணி உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோரின் பங்களிப்பு பெரிது. இது அவர்களையும் சார்ந்த வெற்றியாக கருதுகிறேன்,” என்று அவர் சொன்னார்.
தேசிய சேவைக்குப் பிறகு சிங்கப்பூர் ஆயுதப்படையில் இணைவதற்குத் திட்டமிட்டுள்ள ஜெகன், அதே நேரத்தில் பகுதிநேர பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்ற ஆசைப்படுகிறார்.
அண்மையில் அதிகாரபூர்வ வாலிபால் பயிற்றுவிப்பாளர் சான்றிதழைப் பெற்ற அவர், தன்னை வளர்த்து, ஆளாக்கிய விளையாட்டுக்குத் தொடர்ந்து திருப்பித் தர விரும்புகிறார்.