கனவுகளை நனவாக்கத் தங்களுக்குப் பொருத்தமான கல்வியைத் தேர்ந்தெடுத்த ஜெயக்குமார் ஸ்ரீராம்,20, ஜபேஸ் மைக்கல் ராஜா, 20, இருவருக்கும் பலதுறைத் தொழிற்கல்லூரிக் கல்வியானது, செயற்கை நுண்ணறிவும் வடிவமைப்பும் போன்ற துறைகளில் முன்னிலை பெற்ற மாணவர்களாக நிலைபெறச் செய்துள்ளது.
வெற்றிக்கு வழிகாட்டிய தொழிற்கல்வி
தொடக்கக்கல்லூரியில் படிக்கும்படிப் பலரும் அறிவுறுத்தினாலும் ஜெயக்குமார் ஸ்ரீராம் தனது கல்விப் பாதையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகப் பலதுறைத் தொழிற் கல்வியைத் தேர்ந்தெடுத்தார்.
தொழிலதிபர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடும் அதிகத் திறன்களைப் பெற முடியும் என்ற நம்பிக்கையோடும் அவர் எடுத்த இந்த முடிவு, இன்று அவரைச் செயற்கை நுண்ணறிவுத் துறையில் திறன்மிக்க மாணவராக உயர்த்தியுள்ளது.
சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பயின்று வரும் ஸ்ரீராம் தனது வெற்றிக்குத் தொழிற்கல்லூரிப் பாடங்களும் முக்கியக் காரணம் என்றார்.
அங்குப் பயின்ற காலத்தில் இரண்டு முக்கியமான செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களில் ஸ்ரீராம் தனது திறமையை வெளிப்படுத்தினார். துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையங்களில் (Active Ageing Centres) பணிபுரியும் ஊழியர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் உதவும் வண்ணம் ‘ஹோ சே போ’ (Ho Se Bo?) என்ற செயற்கை நுண்ணறிவுக் கருவியை உருவாக்கினார். முதியவர்களுக்கு வழங்கப்படும் நேரடி உதவியையும் நிலையங்களில் மக்களின் வருகையையும் இக்கருவி கண்காணிக்கிறது.
அதோடு, தற்காப்பு அமைச்சின் முழுமைத் தற்காப்புத் திட்டத்தின்(MINDEF Total Defence Sandbox) வழி “ஒக்குலிஸ்”(Occulis) என்ற திறன்பேசிச் செயலியையும் அறிமுகப்படுத்தினார். இந்தச் செயலியின் மூலம் பார்வையற்றோர் சிங்கப்பூரில் எளிதில் பொது இடங்களில் சாலை அடையாளங்களையும் குறியீடுகளையும் அறியலாம்.
பெற்றோரின் ஆதரவில்லாமல் தன்னால் இந்நிலைக்கு வந்திருக்க முடியாது என்றார் ஸ்ரீராம். மேலும், “அவர்கள் எனக்கு அளித்த ஊக்கமும் சுதந்திரமும் என் முயற்சிகளுக்கு உந்துதலாக இருந்தன,” என்று அவர் கூறினார்.
ஸ்ரீராம் தொழிற்கல்வியைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் கிடைத்த நடைமுறை அறிவும், அவர் உருவாக்கிய கருவி, செயலி போன்றவையும் இன்று அவரை ஒரு சாதனையாளராக அடையாளப்படுத்துகின்றன.
தொடர்புடைய செய்திகள்
வடிவமைப்புத் துறையில் சாதனை படைக்க விரும்பும் மாணவர்
ஜபேஸ் மைக்கல் ராஜா, 20, கடந்த மூன்று ஆண்டுகளாகச் சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில், ஊடகத் துறையில் (Media, Arts and Design) பட்டக்கல்வி மேற்கொள்ளும் மாணவர். சென்ற ஆண்டு அனைத்துலக அடோபி சான்றிதழ் போட்டியில் (Adobe Certified Professional World Championship 2024) தமது கல்லூரியைப் பிரதிநிதித்தார்.
தொழிற்கல்லூரியில் பயில்வதன் மூலம் பல முக்கியத் திறன்களைத் தன்னால் பெறமுடிந்ததாகவும் தொழில்துறை நேரடி அனுபவத்தையும் துறைசார்ந்த வேலைப் பயிற்சியையும் பெற்றதாகவும் கூறிய ஜபேஸ், அது தனது வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியதாகக் கூறினார்.
கற்றதைச் செயல்படுத்த 631.ஸ்டுடியோ என்ற இணைய வணிகத்தை நண்பர்களுடன் இணைந்து தொடங்கியுள்ளார் அவர்.
படிப்புடன் வேலையிலும் கவனம் செலுத்துவது சிரமம் என்றாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும் மனத்துக்குப் பிடித்ததாகவும் இருப்பதால் அவருக்கு அது சுமையாக இல்லை.
வடிவமைப்பு மீதான ஆர்வம் போட்டியில் முன்னிலைபெறக் காரணம் என்ற ஜபேஸ், எதிர்காலத்தில் அனைத்துலக அளவில் வடிவமைப்புத் துறையில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வடிமைப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கவும் திட்டம் வைத்திருக்கிறார்.

