சுயமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற வேட்கை, பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் ஃபாஹிம் அகமதைச் செயலில் இறங்க வைத்தது.
சிராங்கூன் ரோட்டில் உள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலுக்கு அருகே இருக்கும் ‘தலைவா ஸ்டோர்ஸ்’ என்ற கடைக்குச் சொந்தக்காரர் ஃபாஹிம் அகமது.
கிட்டத்தட்ட ஈராண்டுகளுக்கு முன்னர், சாதாரண நிலைத் தேர்வுகளை முடித்த பிறகு நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான பட்டயக் கல்வியில் சேர்ந்தார்.
பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர்வதற்கு முன்பாக 19 வயதில் தமது மாமா மகனுடன் இணைந்து தொழில் தொடங்க ஆசைப்பட்டார் ஃபாஹிம்.
மொத்த விற்பனை வணிகத்தில் ஈடுபட எண்ணிய இருவரும் வெளிநாட்டு ஊழியர்களின் மீது கவனம் செலுத்தி அவர்கள் வாங்க முடிந்த விலையிலும் தரத்திலு உள்ள பொருள்களை விற்க அவர்கள் முடிவுசெய்தனர்.
கைக்கடிகாரத்திலிருந்து விளையாட்டுக் கருவிகள், வாசனைத் திரவம், சாக்லெட் போன்ற எளிய அன்பளிப்புப் பொருள்களுடன் அவர்களது வணிகம் தொடங்கியது. மாறுபட்ட பொருள்களை விற்று வாடிக்கையாளர்களை ஈர்த்தனர். ஈராண்டுகளில் அவர்கள் கடையைத் திறந்தனர்.
“தொடக்கத்தில் நாங்கள் மற்றக் கடைகளுக்கு விற்பனை செய்தோம். துவாஸ், ஜூரோங் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஊழியர் தங்குவிடுதிகளிலும் விற்றோம். மொத்த விற்பனை வணிகம் வளர்ச்சியடைந்ததும் கடை திறந்தோம்,” என்று ஃபாஹிம் கூறினார்.
செறிவு தந்த அனுபவ அறிவு
தொடர்புடைய செய்திகள்
பெற்றோர் இருவரும் சொந்தத் தொழில் செய்பவர்கள் என்றாலும் அவர்களிடத்தில் பண ரீதியான மூலதனத்தை ஃபாஹிம் பெறவில்லை.
பணத்தின் அருமையைப் பாடுபட்டுதான் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது பெற்றோரின் அனுபவ உரை.
“என் அப்பா துணிமணிகளை விற்பவர். சொந்தக் கடை நடத்துவதுடன் முஸ்தஃபா போன்ற பெருங்கடைகளுக்கும் விநியோகம் செய்வார். என் மாமா கைவிளக்கு, மின்சாரப் பொருள்கள், உள்ளிட்டவற்றை விற்கிறார். சிறு வயதில் நான் கடையில் வேலை செய்திருக்கிறேன்,” என்று ஃபாஹிம் கூறினார்.
உணர்ச்சிவயப்பட்டு அகலக்கால் வைப்பது தவறு. இருந்தபோதும், திட்டமிட்டு நிதானத்துடன் மேற்கொள்ளப்படும் காரியங்களிலும் சவால்களையும் அபாயங்களையும் சந்திக்க நேரிடலாம். அவற்றைத் துணிந்து எதிர்கொள்ள இளமைக்காலமே சிறந்தது என்று தமது தந்தை அறிவுறுத்தியதாக கூறினார்.
வெளிநாட்டிலிருந்து பொருள்களைத் தருவிக்கும்போது ஓரிரு முறை ஏமாறியதை நினைவுகூர்ந்த ஃபாஹிம், கடை தொடங்கிய முதல் முயற்சி தோல்வியானதையும் சுட்டினார். இந்தப் பின்னடைவுகளிலிருந்து நல்ல பாடங்களைக் கற்றுக்கொண்டதாகக் கூறிய ஃபாஹிம், இளமையில் கற்றதால் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

