வரம்புகளைத் தாண்ட ஓடும் இளையர்

வரம்புகளைத் தாண்ட ஓடும் இளையர்

1 of 2
படம்: கஷன் குமார்
படம்: கஷன் குமார்

12 Oct 2026 - 6:30 am

2 mins read

சிறுவயதிலேயே தன்னால் நினைத்ததைவிட அதிகமாகச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொண்டார் 26 வயதான கஷன் குமார்.

உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது சிறுவர் படை இணைப்பாட நடவடிக்கையில் சேர்ந்த கஷனுக்கு அங்கு நடைபெற்ற கடுமையான உடற்பயிற்சிகள் தமது உடல் வரம்புகளைத் தாண்டிச் செல்லும் எண்ணத்தை ஏற்படுத்தின.

“என்னால் முடியாது என்று நினைத்த விஷயங்களையும் செய்ய முடியும் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்,” என்றார் இவர்.

பதினைந்து வயதில் இணையத்தின்மூலம் ‘ஐயர்ன்மேன்’ (Ironman) போட்டியைப் பற்றி தெரிந்துகொண்ட கஷன், தமது 25வது வயதிற்குள் அதில் பங்கேற்க வேண்டும் என்று தனக்குத்தானே இலக்கு வகுத்துக்கொண்டார்.

2019ஆம் ஆண்டு முழுநேர தேசிய சேவையைத் தொடங்கியபோதும் இவர் உடற்தகுதியுடன் இருக்கவில்லை. உடலில் ஏற்பட்ட காயத்தால் ஒரு கிலோமீட்டர்கூட வலி இல்லாமல் ஓட முடியாத நிலை ஏற்பட்டது. 

அவ்வேளையில், 15 வயதில் தனக்குத்தானே வகுத்துக்கொண்ட இலக்கு அப்போது அவருக்கு மீண்டும் நினைவுக்கு வந்தது. அதன்பின் மெல்ல பயிற்சியைத் தொடங்கினார்.

2023ஆம் ஆண்டு மலேசியாவின் லங்காவியில் நடைபெற்ற அதிகாரபூர்வ ‘அயர்ன்மேன்’ போட்டியில் பங்கேற்று அதை நிறைவுசெய்தார்.

இன்னும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், 2024ஆம் ஆண்டு இந்தோனீசியாவின் மலைப்பாங்கான பகுதியில் நடைபெற்ற 68 கிலோமீட்டர் அல்ட்ரா நெட்டோட்டப் போட்டியில் பங்கேற்றார். ஆனால், அவரால் அதனை முடிக்க இயலவில்லை.

தளர்ந்துவிடாமல் மீண்டும் பயிற்சியைத் தொடர்ந்த கஷன், அடுத்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த 101 கிலோமீட்டர் அல்ட்ரா நெட்டோட்டப் போட்டியை வெற்றிகரமாக நிறைவுசெய்தார்.

“எனக்கு மனநிறைவைத் தருவது எனது வரம்புகளைத் தாண்டிச் செல்வது மட்டுமன்று, மற்றவர்களும் தங்களது வரம்புகளைத் தாண்டிச் செல்ல ஊக்கமளிப்பதும்தான்,” என்றார் இவர்.

இவ்வாண்டு செப்டம்பர் 26ஆம் தேதி சிங்கப்பூரைச் சுற்றியுள்ள பாதையில் ஓடத் தொடங்கிய கஷன், கிட்டத்தட்ட 26 மணி நேரத்தில் 163 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவை ஓடிக் கடந்தார்.

இத்தகைய ஓட்டத்தை நிறைவுசெய்யும் ஒவ்வொருவரின் கதையையும் நிரந்தரமாகப் பதிவுசெய்யும் ஓர் இணையத்தளக் காப்பகத்தை உருவாக்கும் முயற்சியிலும் இவர் தற்போது ஈடுபட்டுள்ளார்.

“ஒவ்வொருவருக்கும் முடியாது என்று நினைத்ததைச் செய்துகாட்டுவதற்கான தனிக்கதை இருக்கிறது. அவர்களது கதைகள் மற்றவர்களையும் தங்களது வரம்புகளைத் தாண்டிச் செல்ல ஊக்குவிக்கும்,” என்கிறார் கஷன்.

குறிப்புச் சொற்கள்