தமிழ் மொழி விழாவை முன்னிட்டு 3 முதல் 6 வயது வரையிலான பிள்ளைகளுக்காகத் ‘துள்ளும் இளமை’ எனும் நிகழ்ச்சி, ஏப்ரல் 26ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
நாடகம், கதை சொல்லும் நிகழ்ச்சியான இது, இந்திய மரபுடைமை நிலையத்தில் இடம்பெற்றது.
கதை சொல்வது, நடிப்பு, நாட்டுப்புற நடனம், பறையிசை, சிங்கப்பூர் வரலாறு போன்ற அம்சங்களை உள்ளடக்கிய இந்நிகழ்ச்சி என் பிள்ளைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று திருமதி அலமேலு அழகப்பன்,34, சொன்னார்.
இந்நிகழ்ச்சி நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் பாலர் பருவ மேம்பாட்டுக்கான தேசியக் கல்விக் கழக மாணவர்களாலும் ஆசிரியர் லலித்தாள் கிருஷ்ணசாமியாலும் ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறுவர்களைத் தமிழ் பேச ஊக்குவிப்பதும் தமிழ்க் கலாசாரத்தின் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களாகும். இந்நாடகம் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கருப்பொருளாகக் கொண்டு இயற்றப்பட்டது.
பாலர் பருவக் கல்வி மாணவர்கள் குழந்தைகளுக்குப் புரியும்படி எளிமையான தமிழில் நிறைய படங்களைப் பயன்படுத்தி, திரு ஸ்டாம்ஃபர்ட் ராபிள்ஸ், மெர்லயன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்துப் புத்தாக்க முறையில் இந்நாடகத்தை படைத்தனர்.
இந்த நிகழ்ச்சி நடைபெறுவது ஆறாவது முறை.
இத்தகைய நிகழ்ச்சிக்கு முதன்முறையாகத் தலைமை தாங்குவதாகக் கூறிய மாணவர் குழுத் தலைவர் கீதாஷினி சாஷா கிறிஸ்டஃபர் ஷா, 19, “பல சவால்களை எதிர்கொண்டு இந்த நிகழ்ச்சி நன்றாக நடந்தேறியதில் மகிழ்ச்சி. இளம் வயதிலிருந்தே பிள்ளைகளிடம் தமிழைக் கொண்டுசேர்ப்பதை எனது கடமையாகக் கருதுகிறேன்,’ என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்நாடகத்தில் முக்கியக் கதாபாத்திரமாக நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. குழந்தைகளுக்கு எப்படி ஒரு கதையைப் புரியும்படி எடுத்துரைப்பது என்பதைக் கற்றுகொண்டேன். இது போன்ற நிகழ்ச்சிகளின் வழி பிள்ளைகளிடம் மொழியார்வத்தை விதைத்தால்தான் தமிழ் நிலைத்திருக்கும்,” என்றார் மாணவர் ருஸ்பிஹான் சமீர், 24.
மேலும், தாயார் உதயகுமாரி அழகப்பன், 44, “இது ஓர் அருமையான நிகழ்ச்சி. என் மகளின் தமிழ் ஆர்வத்தை அதிகரிப்பதற்கு இது நல்ல தளமாக அமைந்தது,” என்று சொன்னார்.