அதிக சம்பளம், அதிக பட வாய்ப்புகள், நாயகிகளுக்கான பட்டியலில் முதலிடம் என எதற்கும் தான் ஆசைப்படவில்லை என்கிறார் பிரியாமணி.
நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பது மட்டுமே தனது இலக்கு என்கிறார்.
அந்த வகையில் தற்போது நடித்து வரும் 'கொட்டேஷன் கேங்' படம் தனக்கு மிகுந்த மனநிறைவை அளித்துள்ளதாகச் சொல்கிறார் பிரியா. காரணம், இந்தப் படத்துக்காக அந்த அளவுக்கு மெனக்கெட்டுள்ளாராம்.
"பொதுவாக உணர்வுபூர்வமான காட்சிகளில் நடிப்பதுதான் மிகவும் சிரமம் என்பார்கள். அதை நானும் ஏற்றுக்கொள்வேன். அதேசமயம் சண்டைக் காட்சிகளில் நடிப்பது எளிது என்று யாராவது சொன்னால் அவர்கள் என்னுடைய முதல் எதிரி ஆகிவிடுவார்கள்," என்று சிரிக்கிறார் பிரியாமணி.
காரணம், 'கொட்டேஷன் கேங்' படத்தில் நிறைய சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளாராம். அதற்காக சிறப்புப் பயிற்சி பெற்றது, படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயங்கள் ஆகியவற்றை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது என்கிறார்.
"இந்தப் படத்துக்கான படப்பிடிப்பை கொரோனா நெருக்கடிக்கு முன்பே தொடங்கிவிட்டோம். ஆனால் பலமுறை படப்பிடிப்பை ஒத்திப்போட வேண்டி இருந்தது. பிறகு படப்பிடிப்பை தொடங்கியபோது பல காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டியிருந்தது.
"இருப்பினும் இதனால் நாங்கள் வருத்தப்படவில்லை. காரணம், கொரோனாவால் கிடைத்த நேரத்தில் கதையை மேலும் கூர்தீட்டினார் இயக்குநர். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மேலும் மெருகேற்ற முடிந்தது.
"உதாரணமாக எனது உடலில் ஆங்காங்கே பச்சை குத்திக்கொள்வது எனது கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கும் என்றேன். அதை இயக்குநர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து எனது கழுத்து, கைகளில் பழங்குடியின மக்களைக் குறிக்கும் வகையில் பச்சை குத்திக்கொண்டேன்.
"கதைப்படி நான் கூலிக்காக கொலை செய்யும் பெண்ணாக வருகிறேன். எனது கதாபாத்திரம் அதிகம் பேசாது. அதேசமயம் இரண்டொரு வார்த்தைகள் பேசினாலும் அது நச்சென்று இருக்கும். எனவே அந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க கதைக்குழு அதிகம் மெனக்கெட்டது.
"எனது உடல்மொழி மிகவும் வித்தியாசமாக இருக்கும். படப்பிடிப்பின்போது நான் பேசும் சிறிய வசனம், உடல்மொழி உள்ளிட்டவை சரியாக அமைந்தால் மட்டுமே இயக்குநருக்கு மனநிறைவு ஏற்படும். இல்லையெனில் பலமுறை ஒரே காட்சியைப் படமாக்குவோம்.
"பின்னணிக் குரல் பதிவின்போதும்கூட இதே நடைமுறையைத்தான் பின்பற்றினோம். அதனால் எனது கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும்.
"இதற்கு முன்பு பல படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் இந்தப் படம் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. எனக்கான முதல் சண்டைக் காட்சியை நண்பகல் 12 மணிக்குத் தொடங்கி மூன்று மணி நேரம் தொடர்ச்சியாகப் படமாக்கினர்.
"அது நீளமான சண்டைக் காட்சி. யாரேனும் ஒருவர் சிறு தவறு செய்தாலும், மொத்த காட்சியையும் மீண்டும் படமாக்க வேண்டியிருக்கும். பல மணி நேர உழைப்பு வீணாகும்.
"முந்தைய நாள் ஒத்திகை பார்த்த பிறகே சண்டைக்காட்சிகளை எடுத்தோம். எல்லாமே கச்சிதமாக அமைந்துள்ளது.
"சில சமயங்களில் வார்த்தைகளைவிட, சண்டைகளின் சத்தம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதை இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ரசிகர்களுக்குப் புரிய வைக்கும்," என்கிறார் பிரியா மணி.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சில வசனங்கள் அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தும் என்று கூறப்படுவதை மறுத்துள்ள அவர், கதைக்கும் காட்சிக்கும் பொருத்தமான வசனங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகச் சொல்கிறார்.
படக்குழுவில் இருந்த அனைவருமே படத்தின் வெற்றியை மட்டுமே கவனத்தில் கொண்டு உழைத்துள்ளோம். சண்டைக் காட்சிகளைப் படமாக்கியபோது, என்னுடன் நடித்த சிலருக்கு நான் செய்த தவறுகளால் காயம் ஏற்பட்டது. ஆனால் யாருமே அதைப் பொருட்படுத்தவில்லை.
"தரமான படைப்பு குறித்து யாரும் தவறான தகவல்களைப் பரப்பக்கூடாது என்பதே எனது வேண்டுகோள்," என்கிறார் பிரியாமணி.
கொட்டேஷன் கேங் படத்தின் மூலம் இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என விமர்சகர்கள் சிலர் இப்போதே கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால் பிரியா படம் குறித்து மட்டுமே பேசுகிறார்.

