பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் வெளியாகி உள்ள மூன்றாவது படமும் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டிப்பிடிக்கும் எனத் தெரியவந்துள்ளது. இது தமிழ்த் திரையுலகில் எந்த கதாநாயகனும் செய்திராத சாதனை என்று கூறப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் நடித்த முதல் படமான ‘லவ் டுடே’ ரூ.100 கோடி வசூல்கண்டு சாதனை படைத்த பிறகு அனைவரும் ‘யார் இவர்’ என்று வியந்துபோயினர். அடுத்து வெளியான ‘டிராகன்’ படமும் ரூ.150 கோடி வசூல்கண்டு சாதித்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான ‘டியூட்’ படத்தின் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையிலான வசூல் ரூ.66 கோடி.
தீபாவளியன்றும் அதற்கு அடுத்த நாளும் கிடைத்துள்ள வசூலைச் சேர்க்கும்போது மொத்த தொகை ரூ.100 கோடியை நிச்சயம் கடந்துவிடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.
பிரதீப் ரங்கநாதன் அடுத்து நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படமும் இதேபோல் வசூல் காணும் பட்சத்தில், ஒரே நடிகரின் நான்கு படங்கள் வரிசையாக ரூ.100 கோடி வசூல்கண்ட சாதனை அவரைப் போய்ச் சேரும்.

