ஆனந்தியின் ஆசை நிறைவேறியது

ஆனந்தியின் ஆசை நிறைவேறியது

2 mins read
279cdcf6-20ff-449e-9338-9551a4954bbf
-

தன்னுடைய ஆசையை நிறைவேற்றி வைத்த இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மனமார்ந்த நன்றி என்கிறார் 'கயல்' ஆனந்தி. அப்படி என்ன ஆசையாம்? பெரிதாக ஒன்றுமில்லை. தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்குத் தாமே பின்னணிக் குரல் கொடுக்கவேண்டும் என விரும்பியுள்ளார் ஆனந்தி. அதை மாரி ஏற்றுக்கொண்டாராம். அதற்குத்தான் இந்த நன்றி தெரிவிப்புப் படலம். 'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இதன் சிறப்புக் காட்சியைப் பார்த்த திரையுலகப் புள்ளிகள் அனைவருமே இயக்குநரை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள். படத்தில் நடிக்கத் தொடங்கியபோது என்ன நடக்கிறது என்று ஆனந்திக்கு ஒன்றுமே புரியவில்லையாம். மாரி செல்வராஜின் பூர்வீக கிராமத்தில்தான் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இப்படத்தில் நான்கைந்து நாய்களும் நடித்துள்ளன. அவை ஆனந்தியைச் சுற்றிச்சுற்றி வருமாம். நடிகர்கள் எப்படி ஒரு காட்சியில் நடித்து முடித்த பின்னர் சிறிய திரையில் அதை உடனுக்குடன் போட்டுப் பார்ப்பார்களோ, அதேபோல் அந்த நாய்களும் திரையைப் பார்த்துச் செல்லுமாம். "சுற்றிலும் கிராமத்து மனிதர்கள். அவர்கள் பேசுவது, பழகுவது எல்லாமே புதிதாக இருந்தது. நாட்கள் செல்ல செல்ல படத்தின் மையப்புள்ளி என்ன என்பதைப் புரிந்துகொண்டேன். "அதன்பிறகு இவ்வளவு நல்ல படத்தில் நாம் நன்றாக நடிப்பதுடன் பின்னணிக் குரலும் கொடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்," என்கிறார் ஆனந்தி.

இப்படி ஒரு நினைப்பு தோன்றியதும் உடனடியாக இயக்குநரிடம் தெரிவித்தாராம். அதுமட்டுமல்ல, அடிக்கடி மாரி செல்வராஜிடம் இதை வலியுறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மாரிக்கும் அது சரியென மனதில் படவே ஆனந்தியின் ஆசையை நிறைவேற்றி உள்ளார். படக் குழுவினர் ஆச்சரியப்படும் வகையில் கச்சிதமாகப் பின்னணிக் குரல் கொடுத்து அசத்தி உள்ளார் ஆனந்தி.