முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் பல விழாக்கள், பட வெளியீடுகள் என தமிழ்த் திரையுலகம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.
ரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என உற்சாகமாக வலம் வருவர். அபிமான நாயகர்களின் பதாகைகளுக்கு பால் அபிஷேகம் செய்வது, ஊரெங்கும் உள்ள சுவர்களில் படச் சுவரொட்டிகளை ஒட்டி வரவேற்பு அளிப்பது என்று ஒவ்வொரு நிகழ்வும் பெரும் கொண்டாட்டமாக அமையும்.
இன்று அத்தகைய நிகழ்வுகளின் எண்ணிக்கையும் ரசிகர்களின் உற்சாகமும் குறைந்துவிட்டது. காரணம், பெரும்பாலான படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி கண்டதில்லை. அதனால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை.
“கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகில் 2,500க்கும் மேற்பட்ட புது தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க வந்துள்ளனர். ஆனால் அதில் 2,000க்கும் மேற்பட்டவர்கள் முதல் படத்துடன் படத் தயாரிப்பை நிறுத்திவிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பெரும் நஷ்டம் காரணமாக பொருளியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்,” என்று அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டார் இயக்குநர் செல்வமணி.
இந்நிலையில், நடப்பாண்டிலும் ஏராளமான திரைப்படங்கள் உருவாகியுள்ளன. இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் ஏறக்குறைய ஏழு வாரங்கள் உள்ளன. இதுவரை 222 படங்கள் வெளியாகியுள்ள நிலையில், ஆண்டு இறுதிக்குள் மேலும் 50 படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இந்த எண்ணிக்கை சாத்தியமானால் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான படங்கள் திரைகண்ட ஆண்டு என்ற சாதனை படைக்கப்படும்.
இந்த ஆண்டு நன்கு வசூல் கண்ட சில படங்கள் கூட தயாரிப்பாளர்களுக்கு லாபம் தருவதாக அமையவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள்கூட தோல்வியைத் தழுவின.
இதுவரை வெளியான படங்களில் 12 மட்டுமே லாபகரமாக இருந்ததாக பட விநியோகிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அப்படியானால், வெற்றி விகிதம் என்பது 5 விழுக்காடு மட்டுமே.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன்பு இவ்வளவு மோசமான நிலை ஏற்பட்டதில்லை. எனவேதான், தங்களை வளர்த்து ஆளாக்கிய தயாரிப்பார்கள் சிரமத்தில் இருந்தால், அவர்களால் வளர்க்கப்பட்ட கதாநாயகர்கள் பண உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.
இந்த ஆண்டு குறைந்த அளவே வசூல் கண்டாலும், தயாரிப்புத் தரப்புக்கு லாபம் கொடுத்த படங்களும் உள்ளன. அத்தகைய படங்கள் குறித்த ஓர் அலசல் இது.
‘டிராகன்’
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த இந்தப் படத்தில் மொத்த பட்ஜெட் ரூ.35 கோடி என்று கூறப்பட்டது. ஆனால் படத்தின் வசூல் ரூ.150 கோடி. தயாரிப்பாளருக்கு நிகர லாபமாக ரூ.100 கோடி கிடைத்ததாகத் தகவல்.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான படம் இது.
விமர்சன ரீதியிலும் வசூல் அளவிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம். இந்த வெற்றியை இப்படக் குழுவினர்கூட சற்றும் எதிர்பார்க்கவில்லை.
செயற்கைக்கோள் உரிமை, ஓடிடி உரிமை ஆகியவற்றை படம் வெளியாவதற்கு முன்பே, அதன் தரத்தை உணர்ந்து பல்வேறு தரப்பினரும் போட்டி போட்டு வாங்கினர்.
‘மதகஜ ராஜா’
12 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் உருவான படம். பல்வேறு சிக்கல்களால் அப்போது படத்தை வெளியிட முடியவில்லை.
இந்நிலையில், சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி படத்தை வெளியிட்டனர். ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், ரூ.60 கோடிக்கு மேல் வசூல்கண்டு அசத்தியது. இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை.
‘குட் பேட் அக்லி’
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் அஜித், திரிஷா நடப்பில் வெளியான படம்.
ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான இப்படத்துக்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.
படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.250 கோடி. தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை வசூலித்து லாபம் கொடுத்ததாகத் தகவல்.
அதேசமயம் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் எதிர்பார்த்த வசூல் கிடைக்காததால் ஒட்டுமொத்தத்தில் தயாரிப்புத் தரப்புக்கு நஷ்டம் என்றும் ஒரு தகவல் பரவியது.
எனினும், பின்னர் இது பொய்த் தகவல் என்று தயாரிப்புத் தரப்பு விளக்கம் அளித்ததுடன், படம் குறைந்தபட்ச லாபத்தை அளித்ததாக அறிவித்தது.
‘தலைவன் தலைவி’
இது விஜய் சேதுபதி, நித்யாமேனன் இணைந்து நடித்த படம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
கடந்த ஜூலை 25ஆம் தேதி வெளியான இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.30 கோடி. ஆனால், வசூல் ரூ.100 கோடியைக் கடந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இப்படத்தின் செயற்கைக்கோள், ஓடிடி வெளியீட்டு உரிமங்களும் நல்ல தொகைக்கு விற்கப்பட்டதாகத் தகவல்.
மற்ற படங்கள்
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், வைசாக் இசையமைப்பில், மணிகண்டன், சான்வே மேக்னா, குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடிப்பில் ஜனவரி 24ஆம் தேதி வெளியான படம் ‘குடும்பஸ்தன்’. ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில், ஹேஷம் அப்துல் வகாப் இசையமைப்பில், சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்ய லெட்சுமி, சுவாசிகா நடிப்பில் மே 16ஆம் தேதி வெளியான படம் ‘மாமன்’. ரூ.15 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.40 கோடி வசூலித்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஷ்ருதிஹாசன் நடிப்பில், ரூ.400 கோடியில் உருவான படம் ‘கூலி’. ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.600 கோடி வசூல்கண்டது.
சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் நூறு கோடி ரூபாய் வசூல் கண்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும், படத்தின் மொத்தச் செலவு ரூ.150 கோடியைக் கடந்துவிட்டது என்பதால் தயாரிப்புத்தரப்புக்கு பெரிய லாபம் இல்லை எனக் கூறப்பட்டது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ படம், ரூ.15 கோடியில் தயாரிக்கப்பட்டு ரூ.40 கோடி வசூல்கண்டு சாதித்தது.
பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படம் ரூ.35 கோடியில் உருவாகி, ரூ.125 கோடி வசூல் கண்டதாகக் கூறப்படுகிறது.
‘காந்தாரா சாப்டர்-1’ கன்னடப் படம் உலகம் முழுவதும் ரூ.800 கோடி வசூல் கண்ட நிலையில், தமிழ்ப் பதிப்பு ரூ.60 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

