ஏராளமான விளம்பரப் படங்களை இயக்கியுள்ள அவினாஷ் ஹரிஹரன் 'அரசியல்ல இதெல்லாம் சாதா ரணமப்பா' மூலம் திரைப்பட இயக்குநராகி உள்ளார். தலைப்பை வைத்து இது அரசியல் நையாண்டிப் படம் எனும் முடிவுக்கு வந்துவிட வேண்டாம் என்பது இவரது கோரிக்கை. "ரோபோ சங்கர் இதில் அரசியல்வாதியாக வருகிறார். அந்தளவுக்குதான் இப்படத்தில் அரசியல் இருக்கும்.
மற்றபடி அரசியல் வாடை அறவே இருக்காது. கதையை இப்போதே சொல்லிவிட்டால் சுவாரசியம் குறைந்துவிடும். கமல் நடித்த 'பஞ்சதந்திரம்' போன்று இடைவெளியே இல்லாத நகைச்சுவையை எதிர்பார்க்கலாம். நாயகன் வீரா புகைப்படக் கலைஞராக நடித்துள்ளார். நாயகி மாளவிகா நாயர். நகைச்சுவையுடன் கூடிய இவர்களது நடிப்பு நிச்சயம் பேசப்படும். இதுவரை வில்லத்தனம் செய்துவந்த பசுபதியை நல்ல நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் திரையில் காண்பர்," என்கிறார் அவினாஷ் ஹரிஹரன்.

