திரையுலகில் பணியாற்றும் பெண்களுக்கும் பாலியல் தொல்லை ஏற்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை என இளம் நாயகி அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும் இதுவரை தமக்கு அப்படிப்பட்ட தொல்லைகள் ஏதும் ஏற்பட்டதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 'பிரேமம்' மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அனுபமா. தற்போது தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார். தனுஷ் நடித்துள்ள 'கொடி' படத்தில் இவரும் ஒரு நாயகி.
இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில் நடிகை களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து இவர் வெளிப்படையாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையுடனும் லட்சியத்துடனும் வரும் புதுமுக நடிகைகளுக்குத்தான் அதிகளவில் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவ தாகச் சொல்கிறார் அனுபமா. "பாலியல் தொல்லை அளிக்கப்படும்போது அதை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலை உள்ளவரை அதைத் தடுக்க முடியாது என்று நினைக்கிறேன். என்னைச் சுற்றி நல்லவர்கள் பலர் உள்ளனர். என் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ளனர். எனவே, அவர்கள் இருக்கும் வரை எனக்கு எந்தவிதமான பிரச்சினையும் எழாது என்பது உறுதி.
"என்னைப் பொறுத்தவரை அழகு என்பது நவநாகரிகமாக உடைகள் அணிவதிலோ, குறிப்பாக குட்டைப் பாவாடைகள் அணிந்து வலம் வருவதிலோ இல்லை. தனது திறமையை வெளிப்படுத்தி நல்ல நடிப்பை வழங்குவதில்தான் ஒரு நடிகையின் அழகு உள்ளது," என்கிறார் அனுபமா.
இந்தி நடிகைகள் பலர் பாலியல் தொல்லை குறித்து தைரியமாக, வெளிப்படையாகப் பேசுவதாகச் சுட்டிக் காட்டுபவர், தென்னிந்திய நடிகைகள் இது குறித்துப் பேசத் தயங்குவதாகக் குறிப்பிடுகிறார். "பொதுவாக பாலியல் தொல்லைகள் உட்பட திரை யுலகம் சார்ந்த வேறு சில பிரச்சினைகள் குறித்தும் பேசுவதற்கு இங்கு யாரும் தயாராக இல்லை. வெளிப் படையாகப் பேசினால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படுமோ என்று கருதுவதே இதற்குக் காரணம்.
"சில விஷயங்கள் குறித்து வாய் திறந்தால் தங்க ளுக்குரிய வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்கிற அச்சமும் அவர்களுக்கு உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
"தயக்கத்தை உதறித் தள்ளினால் மட்டுமே பல தொல்லைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். நம்மைச் சுற்றியுள்ள நல்லவர்களை அடையாளம் கண்டுகொண்டு, அவர்களின் துணை எப்போதும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்," என்கிறார் அனுபமா.
தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதில் இவருக்கு வருத்தம் உள்ளதாம். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க எவ்வளவு நாள் வேண்டுமானாலும் கால்ஷீட் தரத் தயாராக உள்ளாராம்.