இயக்குனர் சுசி கணேசன் தமக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுப்பி யுள்ளார் நடிகை அமலாபால். இதனால் கோடம்பாக்க வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது. சுசி கணேசன் மீது இதே போன்ற குற்றச்சாட்டை சுமத்தியுள்ள கவிஞரும் ஆவணப் பட இயக்குநருமான லீனா மணிமேகலையை தாம் ஆதரிப்பதாகவும் அமலாபால் தெரிவித்துள்ளார். சுசி கணேசன் இயக்கத்தில் உருவான 'திருட்டுப் பயலே-2' படத்தில் நாயகியாக நடித்துள்ளார் அமலாபால். அப்படத்தின் படப்பிடிப்பின் போதே தாம் இயக்குநரிடம் இருந்து பாலியல் தொல்லையை எதிர் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். லீனா மணிமேகலையின் இயக்குநர் சுசி கணேசன் மீதான குற்றச்சாட்டை ஆதரிப்ப தாகவும் பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தரத் தெரியாதவர் சுசி கணேசன் என்றும் அறிக்கை ஒன்றில் அமலாபால் குறிப்பிட்டுள்ளார்.
அப்படிப்பட்ட ஒரு மனிதரிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய ஒரு பெண் என்ன பாடுபட்டிருப்பாள் என்பதை தம்மால் நன்கு புரிந்துகொள்ள முடிவதாக அவர் கூறியுள்ளார். "நான் சுசி கணேசன் இயக்கிய படத்தின் கதாநாயகியாக இருந்தாலும், அவரது இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியாத யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உரசும் மனப்பான்மை எனப் பல்வேறு சங்கடங்களை சந்தித்து இருக்கிறேன். இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடுபட்டிருப்பார் என்பதை நான் அறிகிறேன்," என்று அமலாபால் தெரிவித்துள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடுமையை சமூக வலைதளங்கள் மூலம் லீனா மணிமேகலை சொல்லி இருப்பதை மனதாரப் பாராட்டு வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இன்றைய பொருளாதார நிலையில் பெருகி வரும் வேலைக்கென்று வரும் பெண்களின் தொகையும், பெண்களை ஓர் எளிய இரை யாக்கி விடுவதாகக் கூறியுள்ளார். அனைத்து தொழில்களிலும் துறைகளி லும் இத்தகைய கொடுமை நடப்பதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

