பெண் காவலர்களைப் பாராட்டும் நிவேதா பெத்துராஜ்

பெண் காவலர்களைப் பாராட்டும் நிவேதா பெத்துராஜ்

2 mins read
62b7034d-5caa-477a-af5e-8a34543484c4
-

'திமிரு புடிச்சவன்' படத்தில் விஜய் ஆண்டனியும் நிவேதா பெத்துராஜ்ஜும் நடித்திருக்கின்றனர். அந்தப் படம் முழுவதும் அவர் காவலராக நடித்திருப்பதாகவும் அந்த உடையை அணிந்து நடிக்கும்போது மிகவும் சிரமப்பட்டதாகவும் கூறியுள்ளார். 'ஒருநாள் கூத்து', 'பொதுவாக எம்மனசு தங்கம்', 'டிக் டிக் டிக்' படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து 'திமிரு புடிச்சவன்', 'பார்ட்டி', 'பொன்மாணிக்கவேல்' என்று பல படங்களில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஆண்டனியுடன் அவர் நடித்துள்ள 'திமிரு புடிச்சவன்' படம் வருகிற 16ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் காவலர் வேடத்தில் நடித்திருப்பதாகச் சொல்லும் நிவேதா பெத்துராஜ், முதன்முதலாக என்னை நம்பி நல்ல கனமான வேடம் கொடுத்திருக்கிறார்கள் என்று பெருமையாகக் கூறினார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தப் படத்தில் காவல்துறை உடையணிந்து நடித்தபோது மிகவும் சிரமமாக இருந்தது. நாள் முழுவதும் எப்படித்தான் காவல்துறையினர் இந்த உடையைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தேன். அந்த அளவுக்கு நடக்கும்போது, குதிக்கும்போது, குனியும்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர்களைக் கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும்.

"அதோடு, இந்தப் படத்தில் நான் சென்னை தமிழ் பேசி நடித்துள்ளேன். முதல் இரண்டு நாட்கள் அப்படி நடிப்பது சிரமமாக இருந்தது. ஆனால் பின்னர் பழகிக்கொண்டேன். நான் ஏற்று நடித்த மடோனா கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நான் என்னை மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறேன். "எனக்கான குரல் பதிவின்போது எனது நடிப்பைப் பார்த்து நானே சிரித்தேன். அந்த அளவுக்கு நகைச்சுவைக் காட்சிகளிலும் நான் நன்றாக செய்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த கணேசா, நடிகர் விஜய் ஆண்டனி ஆகிய இருவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்," என்றார் நிவேதா பெத்துராஜ்.

இந்நிலையில் 'திமிரு புடிச்சவன்' படம் தீபாவளிக்கு வெளிவரவேண்டியது. ஆனால் 'சர்கார்' படம் தீபாவளிக்கு வெளிவந்து பல திரை அரங்குகளைக் கைப்பற்றியதால் 'திமிரு புடிச்சவன்' படத்தை படக்குழு நவம்பர் 16ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தது. ஆனால் அன்றைய தேதியில் தயாரிப்பாளர் சங்கம் சிறிய வரவுசெலவில் தயாரிக்கப்பட்ட 4 படங்களை வெளியிட முடிவுசெய்து 'திமிரு புடிச்சவன்' படத்தை கிறிஸ்மஸ் விடுமுறை தினத்திற்கு தள்ளி வைத்தது.