மலையாளக் கரையோரத்தில் இருந்து கோடம்பாக்கம் வரும் நாயகிகள் அனைவருமே தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளின் பட்டியலில் இடம்பெற்றவர்கள்தான். அந்த வரிசையில் அனுபமா பரமேஸ்வரனுக்கும் நிச்சயம் இடமுண்டு. இவர் யார் என்று கேட்பவர்களுக்காக சிறு விளக்கம். அதிக தமிழ்ப் படங்களில் நடிக்காததால் இவரை உங்களுக்குத் தெரியாமல் போயிருக்கலாம். ஆனால் தனுஷ் ரசிகர்களுக்கு இவரைப் பிடிக்கும். 'கொடி' படத்தில் தனுஷுடன் ஆடிப் பாடியவர். அறிமுகமானது மலையாள 'பிரேமம்' படத்தில். என்றாலும் இப்போது கோலோச்சுவது தெலுங்கில்தான். அங்கு இளம் நாயகர்களின் முதல் தேர்வாக அனுபமா வளர்ந்து கொண்டிருக்கிறாராம். திரையுலகில் இதுவரை தனது வளர்ச்சியானது மனதுக்கு மனநிறைவு அளிப்பதாகச் சொல்கிறார்.
"அடிப்படையில் நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். இந்தளவு பெயரும் புகழும் கிடைக்கும் என நிச்சயமாக கனவில்கூட எதிர்பார்க்கவில்லை. அதற்கெல்லாம் காரணம் 'பிரேமம்'தான். இதைச் சொல்வதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை. "அந்தப் படத்தில் நடித்த பிறகு கேரளாவின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டுபிடித்துப் பேசுகின்றனர்," என்கிறார் அனுபமா. இவரது முதல் தெலுங்குப் படமான 'அ... ஆ...'விற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு அங்கும் ஏறுமுகம்தான். டோலிவுட்டில் தனக்கான முக்கியத்துவம் வேகமாக அதிகரித்து வருவதாகவும் இதனால் அடுத்தடுத்த படங்களில் மிகுந்த நம்பிக்கையுடன் உற்சாகமாகப் பணியாற்றி வருவதாகவும் சொல்கிறார்.

