தமிழ்த் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவருக்கு அரசியல் பின்னணி இருந்தாலும் அதைப் பயன்படுத்தாதவர் இவர். ஆரம்பத்தில் தயாரிப்பாளராக இருந்து பின்னர் நடிகராக மாறினார். ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதையை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். இவரது படங்கள் வியாபார ரீதியில் வெற்றிப் படமாக அமைந்து வருகின்றன. தற்போது 'கண்ணே கலைமானே', 'சைக்கோ' ஆகிய படங்களில் உதயநிதி நடித்து வருகிறார்.
இதற்கிடையில் 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ரசிகர் மன்றத்தின் மூலம் உதவிகள் செய்து வருகிறார். இதுதொடர்பான பதிவை டுவிட்டரில் உதயநிதி பகிர்ந்திருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள ஒருவர், "யோவ் உதயநிதி, உனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்களா?" என்று நக்கலாக கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குச் சற்றும் கோபப்படாமல், "ரசிகர்கள் எல்லாம் இல்லை நண்பா. நற்பணி செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்!" என்று பதில் அளித்துள்ளார் உதயநிதி.

