'பிக் பாஸ் 2' நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை ரித்விகா. கூகுளில் இவர் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்று தேடியவர்களுக்கு காட்டமாகப் பதிலளித்திருக்கிறார். 'பரதேசி' படம் மூலம் நடிகையானவர் ரித்விகா. வளர்ந்து வரும் நடிகையான அவர் 'பிக் பாஸ் 2' நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றார். இந்நிலையில் பலரும் ரித்விகாவின் சாதியைத் தெரிந்துகொள்ள கூகுள் செய்துள்ளனர். ரித்விகா ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால்தான் அவருக்குப் 'பிக் பாஸ் 2' 'டைட்டில்' கிடைத்ததாக பேச்சுக் கிளம்பியுள்ளது. இது ரித்விகாவுக்குத் தெரிய வரவே அவர் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
"ரித்விகா எந்தச் சாதி என்று தேடுபவர்களுக்கும் நான் குறிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வெற்றி பெற்றேன் என்று விமர்சிப்பவர்களுக்கும் நான் அந்தச் சாதியும் இல்லை, இந்தச் சாதியும் இல்லை. நான் எந்தச் சாதி என்று உங்கள் சாதிச் சாக்கடையில் தேடிக் கண்டுபுடிச்சுக்கோங்கடா," என்று டுவீட் செய்துள்ளார். ரித்விகாவின் டுவீட்டை பார்த்த இணையத்தளவாசிகள் "நீ ஏம்மா இதற்கெல்லாம் விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கிறாய்? போய் வேலையைப் பார்," என்று ஆறுதலாகப் பதிவிட்டு வருகின்றனர்.

