'புளூவேல்' என்ற வார்த்தையை அவ்வளவு சுலபத்தில் யாரும் மறந்திருக்க முடியாது. அந்தப் பெயரில் உருவான கணினி விளையாட்டால் பல விபரீதங்கள் ஏற்பட்டது. இது குறித்து விவரிக்கும் படமாக, இதே பெயரில் ஒரு திரைப்படம் உருவாகிறது. ரங்கநாதன் இயக்குகிறார். இவர் எஸ்.ஜே.சூர்யா, பிரவீண்காந்தி, தியாகராஜன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தனியாக ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று முயற்சி செய்தவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
'புளூவேல்' விளையாடிய மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டது தமிழகத்தை அதிர வைத்தது. இந்தச் சம்பவத்தை அடிப்படை யாக வைத்துக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. கல்லூரி மாணவராக கபிஷ் கன்னாவும் காவல்துறை அதிகாரியாக பூர்ணாவும் நடித்துள்ளனர். "எனது கதாபாத்திரத்தில் ஜோதிகாவைத் தான் ஒப்பந்தம் செய்ய நினைத்திருந்தனர். சில காரணங்களால் அது சாத்தியப்படவில்லை. அதன் பிறகு என்னை ஒப்பந்தம் செய்துள்ளனர். "ஜோதிகா நடிக்கும் அளவுக்கு உருவாகியுள்ள கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நான் தயங்க வேண்டிய அவசியமே இல்லை. அதனால் உடனடியாக ஒப்புக்கொண்டேன். என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வழங்கி இந்த கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்துள்ளேன்.
"'புளூவேல்' விளையாட்டு இந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதை நினைக்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. இந்தப் படம் இளையர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகி உள்ளது. "கைபேசி, இணையம் ஆகியவை எந்தளவுக்கு மனித வாழ்க்கையை மேம்படுத்துகின்றனவோ, அதே அளவுக்கு பிரச்சினைகளும் இருப்பதை நினைத்தால் கவலையாக உள்ளது," என்கிறார் பூர்ணா. "படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த இளைஞன் இப்படியொரு முடிவை எடுத்தது வருத்தம் தருகிறது. கைபேசிகள் ஒருவரது தனிமையைப் போக்குகின்றன. அதே சமயம் அவற்றுக்கு அடிமையாகும் போது விபரீதம் ஏற்படுகிறது.
"இதை பெரிய பட்ஜெட் படமாக எடுத்திருக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்பின்றிப் போனது. எனினும் திட்டமிட்டதை விட செலவு சற்றே அதிகரித்துள்ளது. தரத்தில் எந்தக் குறையும் இல்லாமல் படத்தை உருவாக்கி உள்ளோம். "எனவே ரசிகர்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறோம். இப் படம் இளையர்கள் மத்தியில் விழிப்பு ணர்வை ஏற்படுத்தினால் திருப்தி அடைவோம்," என்கிறார் ரங்கநாதன்.

