கங்கனா ரணாவத் நடித்திருக்கும் படம் 'மணி கர்னிகா'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் படத்தை வெளியிடத் தடை விதிக்கும்படி திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. ராணி லட்சுமிபாய் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்துத் தயாராகும் 'மணிகர்னிகா' படத்தில் லட்சுமிபாயாக கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் ரூ.14 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய நடிகைகள் எவரும் இதுவரை இவ்வளவு சம்பளம் பெற்றது இல்லை.
இந்தப் படத்தை பிரபல இயக்குநர் கிரிஷ் இயக்கியிருக்கிறார். படத்தின் முதல் படம் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் குட்டைத் தலைமுடி, தலையில் முண்டாசு, தோடு, மூக்குத்தி அணிந்து வாளுடன் கம்பீரமாக கங்கனா இருப்பதாக ரசிகர்கள் பாராட் டினர். 'பத்மாவத்' படம் போல் 'மணிகர்னிகா' படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்நிலையில் இயக்குநர் கிரிஷ் தெலுங்கில் மும்முரமாக இருப்பதால் ஒரு சில காட்சிகளை நடிகை கங்கனா ரணாவத்தே படமாக்கி வந்தார். படப்பிடிப்பில் கங்கனா ரணாவத்துக்கும் சக நடிகருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
மேலும் துணை நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவில்லை. அவர்களுக்கு ரூ.1.5 கோடி சம்பள பாக்கி உள்ளது என்றும் அந்தத் தொகையைக் கொடுக்காமல் படத்தைத் திரைக்குக் கொண்டுவர அனுமதிக்கக்கூடாது என்றும் இந்திய சினிமா துறையிலும், தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

