'சீமத்துரை' என்னும் பெயரைக் கேட்டாலே நமக்குக் கிராமங்களும் அங்கே வெள்ளந்தியாக திரியும் இளைஞர்களும்தான் நினைவுக்கு வருவார்கள். இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன் கூறுகையில் "கிராமங்களில் வாழும் ஒவ்வொரு இளவட்ட வாலிபர்களுமே சீமத்துரைதான். அப்படி எங்கள் பகுதியான பட்டுக்கோட்டையைச் சுற்றி நடந்த உண்மை சம்பவங்களை வைத்துதான் இந்தப் படத்தை எடுத்து இருக்கிறோம்.
"கிராம மக்களுக்கு அருவா, கத்தி மட்டும் ஆயுதம் அல்ல. பாசமும் ஒரு ஆயுதம்தான். 'சீமத்துரை' என்னும் தலைப்புக்கேற்றாற்போல் காதல், கலாட்டா, கலவரம் என்று எல்லாம் கலந்த ஒரு படமாக உருவாகி இருக்கிறது. "தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையைச் சுற்றிதான் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். பட்டுக்கோட்டையைச் சுற்றி உயர்ந்து நின்ற தென்னை மரங்கள் படத்தில் முக்கியமாக பதிவு செய்தோம். ஆனால் அந்தத் தென்னை மரங்களைக் 'கஜா' புயல் சுத்தமாக அழித்துவிட்டது.
"நாங்கள் அழகாக படம் பிடித்த பகுதிகள் இன்று அலங்கோலமாகக் கிடப்பதை பார்க்கும்போது படக்குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் வேதனை ஏற்பட்டுள்ளது. கிராம மக்கள் அனைவரும் மீண்டு எழுந்து வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார் 'சீமத்துரை' இயக்குநர்.

