ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக 'இந்தியன்-2' படத்தில் நடிக்கவிருக்கும் காஜல் அகர்வால், உலக நாயகன் கமல்ஹாசனுடன் நடிக்க இருப்பது மகிழ்ச்சியான ஒன்று என்றும் சவால்களை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இயக்குநர் ஷங்கரின் கனவுப் படங்களில் ஒன்று 'இந்தியன் 2'. இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்று பல தகவல்கள் வலம் வந்தாலும் தற்பொழுது அதே படத்தில் கமல்ஹாசனுக்கு இணையாக தான் நடிக்க இருப்பதாக உறுதி செய்துள்ளார் காஜல் அகர்வால்.
தெலுங்கு திரைப்படம் 'கவசம்' இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய காஜல், "அடுத்ததாக கமல் சாருடன் 'இந்தியன் 2' படத்தில் நடிக்க இருக்கிறேன். அவருடன் இணைந்து நடிக்க இருக்கும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்," என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளாக, 'கால்ஷீட்' கொடுக்க முடியாத அளவுக்குக் கைவசம் படங்கள் வைத்திருந்த காஜல் அகர்வால், இந்த ஆண்டு இறுதியில் திடீர் என்று காணாமல் போனார். அது பற்றி கேட்டபோது, காஜல் அகர்வால் மனம் திறந்து பேசினார். "இந்த ஆண்டு திரை சம்பந்தமாக எனக்கு நல்ல ஆண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் அப்படி இல்லை. இந்த ஆண்டின் துவக்கத்தில் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டது.
"எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுச் சிகிச்சை எடுத்தேன். மாலை நேரம் வந்துவிட்டால் காய்ச்சல் வரும். மிகவும் சோர்வாகிவிடுவேன். மருத்துவரிடம் சென்றபோதுதான் எனக்கு இப்படி ஒரு பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. மூன்று மாதங்கள் ஓய்வு எடுக்க நினைத்தேன். கையில் உள்ள படங்களை மட்டும் முடித்துவிட்டுப் புதுப்படங்களை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதால் தொடர்ந்து நடித்து முடித்துக் கொடுத்தேன். அதன் பின்னர் மூன்று மாதங்கள் ஓய்வு எடுத்தேன். தற்போது குணமாகிவிட்டேன்.

