பல்வேறு சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இசையமைப்பாளர் டி.இமான்.
இந்நிலையில், பிறந்த நாளையொட்டி அவர் தன் உடலை சென்னை அரசு மருத்துவமனைக்குத் தானமாக அளித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது இசைப்பயணத்தைத் தொடங்கி 23 ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“23 வருடங்களுக்கு முன்பு, விஜய், பிரியங்கா சோப்ரா நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் இசையுலகில் கால்பதித்தேன். அது என் வாழ்க்கையை இவ்வளவு மாற்றும் என்று அப்போது தெரியவில்லை. இன்று நான் நன்றியுடன் திரும்பிப்பார்க்கிறேன்.
“என் ரசிகர்கள், வழிகாட்டிகள் மற்றும் நலம்விரும்பிகளுக்கு... உங்கள் அன்புதான் எனது மிகப்பெரிய பலம். இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றியதற்கு நன்றி,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் இமான்.

