தம்மை இன்ஸ்டகிராமில் ஏறக்குறைய மூன்று கோடி பேர் பின்தொடர்வதாகக் கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.
அதற்காக தன் படத்தைக் காண அந்த மூன்று கோடி பேரும் திரையரங்க நுழைவுச்சீட்டு வாங்குவார்கள் என உத்தரவாதம் அளிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது சூர்யாவுடன் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பூஜா. இப்படம் அடுத்த மாதம் 1ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கும் நடனமாடி உள்ளார்.
‘ரெட்ரோ’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவரும் வெளிப்படையாகப் பதிலளித்தார்.
“ஐம்பது லட்சம் இன்ஸ்டா உறுப்பினர்களை மட்டுமே கொண்ட பல நடிகர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் நடிக்கும் படங்களுக்கு அதிக கூட்டம் கூடும். சமூக ஊடகங்கள் உண்மையான உலகம் கிடையாது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்,” என்று கூறினார் பூஜா ஹெக்டே.