‘லியோ’ படத்திற்குப் பிறகு ரூ.50 கோடி ஊதியம் பெறுவதாக வெளிப்படையாகக் கூறியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
தற்போது ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கியுள்ள ‘கூலி’ படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
“ரஜினிகாந்த் சம்பளம் எவ்வளவு என்று நான் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் எனது சம்பளம் 50 கோடி ரூபாய் என நீங்கள் குறிப்பிட்டது உண்மை. இது எனது முந்திய படமான ‘லியோ’ வெற்றியால் அதிகமானது. ‘லியோ’ திரைப்படம் ரூ.600 கோடி வசூலித்தது. இதனால் எனது சம்பளமும் அந்தப் படத்தில் வாங்கியதைவிட இரண்டு மடங்கு அதிகமானது,” என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த பணத்தில் வருமான வரி செலுத்துவதோடு நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த நிலையை அடைய நான் செய்த தியாகங்கள் குறித்து ஏதும் சொல்லப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.
“’கூலி’ படத்தை உருவாக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன. இந்தப் படம் ரூ.1,000 கோடி வசூலிக்குமா எனக் கேட்கிறார்கள். அதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், மக்கள் ரூ.150 கொடுத்து வாங்கிப் பார்க்கும் நுழைவுச்சீட்டுக்கு ஏற்ற படமாக இருக்கும். அதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்று லோகேஷ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ‘கூலி’யில் இடம்பெற்ற ‘மோனிகா’ பாடல் வெளியாகி, மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
“பாடல்கள் குறித்து சொல்ல வேண்டுமெனில், அது முழுவதுமே அனிருத்தின் முடிவுதான். நான் அவரை முழுமையாக நம்புகிறேன். நானும் அனிருத்தும் இத்தாலி நடிகையான மோனிகா பெலூசியின் தீவிர ரசிகர்கள். மோனிகா பெலூசியின் உலகளாவிய ரசிகர்களுக்கு இந்தப் பாடல் ஓர் அர்ப்பணிப்பு.
தொடர்புடைய செய்திகள்
“பூஜா ஹெக்டேயின் சிவப்பு நிற உடை, ‘மலேனா’, ‘ஸ்பெக்டர்’ படங்களில் மோனிகாவின் அடையாளமாக இருந்தது. மோனிகா பெலூசி பாடலுக்கு அனிருத் இசையமைத்த பிறகுதான் பூஜா ஹெக்டேவிற்கு ‘மோனிகா’ என்ற பெயரையே வைத்தோம்,” என்று கூறியுள்ளார் லோகேஷ்.

