திரிஷாவின் 'கர்ஜனை' படப்பிடிப்பு ரத்து தற்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்பொழுது 'மோகினி', 'கர்ஜனை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அதற்குத் தடை கோரும் 'பீட்டா' அமைப்பின் தூதராக திரிஷா இருப்பதால் அவரை வைத்துப் படம் தயாரித்திருப்பவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். காரணம் 'பீட்டா' அமைப்புக்கு எதிராக இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது தமிழகத் தில் எதிர்ப்பு வலுத்துள்ளது. அதனால்தான் திரிஷா நடித்து வரும் 'கர்ஜனை' படப்பிடிப்பு தளம் வரை சென்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து படப்பிடிப்பை நிறுத்தி இருக்கின்றனர். மேலும் இந்த எதிர்ப்பை இதோடு விட்டுவிடக்கூடாது.
திரிஷா நடித்த படங்கள் வெளியாகும்போது எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். அதனால் திரிஷாவை கதையின் நாயகியாக வைத்துப் படம் தயாரிப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதோடு இதுவரை இந்த மாதிரி மிரட்டல்களுக்குக் கலங்காத திரிஷாவும் இந்தப் பிரச்சினையினால் தனது திரையுலக வாழ்க்கை சரிந்து விடுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார். இந்த நிலையில் ஆழ்ந்த இரங்கல் என்று அவரது புகைப்படத்துடன் சுவரொட்டி ஒன்று சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவி வருகிறது. அதில் திரிஷா 'எய்ட்ஸ்' நோயால் பாதிக்கப்பட்டு 12.01.2017 அன்று உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படிக்கு என்ற இடத்தில் அப்பா=அம்மா என்று அச்சிடப்பட்டிருப்பது தற்பொழுது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மனம் உடைந்த திரிஷா இணையத்தில், "தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பேசியதே இல்லை. என்னை இறந்துவிட்டதாக சித்திரித்து என் குடும்பத்தையும் தரக்குறைவாகப் பேசியது என்னை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது," என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கிடையில் தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகையும் இயக்கு நருமான ஸ்ரீ பிரியா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார். "தமிழா எழுந்துகொள்! ஜல்லிக்கட்டை நடத்து, ஜல் ஜல் ஜல் என சலங்கை ஒலியுடன் வாருங்கள் காளைகளே!" என்று இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்.

