குஷ்பு மகள் திருமணத்தில் 80களின் பிரபலங்கள்

குஷ்பு மகள் திருமணத்தில் 80களின் பிரபலங்கள்

2 mins read
a5424852-108f-4283-b154-6db5a1bac84c
அவந்திகா-ஷ்ரவன் சீனிவாசன் திருமணத்தில் சுந்தர் சி, குஷ்பு சுந்தர், அனந்திதா. - படம்: குஷ்பு எக்ஸ்

குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா சுந்தரின் திருமணத்தில் 80களின் திரைப்படப் பிரபலங்களும் தற்போது அதிகம் பேசப்படும் திரிஷா கிருஷ்ணனும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

இயக்குநர் சுந்தர் சி, குஷ்பு தம்பதியின் மகள் அவந்திகாவுக்கும் அவர் காதலித்து வந்த ஷ்ரவன் சீனிவாசனுக்கும் கோவாவில் இருக்கும் உல்லாசத் தலத்தில் ஜூன் 25ஆம் தேதி திருமணம் நடந்தது. பிரமாண்டமாக அந்தத் திருமணம் நடைபெற்றது.

அதில் 80களில் பிரபலமாக இருந்த திரைப்பட நாயகர், நாயகியர் கலந்து கொண்டனர்.

விருந்தினர்கள் எல்லாரும் தங்க நிற உடையில் வந்திருந்தார்கள். வழக்கமாக 80களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடந்தால் அதற்கு நட்சத்திரங்கள் ஒரே நிற உடை அணிந்து வருவார்கள். தற்போது அவந்திகா திருமணத்திலும் அதே மாதிரி ஒன்றுகூடல் நிகழ்ந்துள்ளது.

குஷ்பு மகள் அவந்திகாவுக்குக் கூட்டம் கூடினால் பிடிக்காது என்பதால் தனக்குப் பழக்கமான அனைவரையும் அழைக்கவில்லை குஷ்புவும், சுந்தர் சி.யும். ஒரு சிலரை மட்டுமே அழைத்திருந்தனர்.

யாருக்கும் சொல்லாமல் இரண்டு குடும்பத்தினர் மட்டும் பதிவு அலுவலகத்தில் எளிமையாகக் கல்யாணத்தை முடித்துவிடலாம் என்றாராம் அவந்திகா.

“நீ எங்களுக்கு மூத்த மகள், இது நம் வீட்டு முதல் திருமணம், அதைப் பதிவு அலுவலகத்தில் நடத்த முடியாது,” என்று அப்பாவும் அம்மாவும் கறாராக சொல்லிவிட்டார்களாம்.

மகளின் திருமணத்திற்குக் கண்டிப்பாக வர வேண்டும் எனத் தம்பி விஜய்க்கு அழைப்பு விடுத்திருந்தனர் அக்கா குஷ்பு. மேலும் டெல்லி வரை சென்று பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பிதழ் கொடுத்தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அவந்திகாவின் திருமணத்தில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி அருகில் தங்க நிறச் சேலையணிந்து த்ரிஷா அமர்ந்திருந்தார்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கும் தங்க நிற உடை தான் அணிந்திருந்தார் திரிஷா. அந்த நிகழ்ச்சியில் நண்பர் விஜய் அருகில் நின்று அவர், எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடங்களில் தீயாகப் பரவியது. இந்நிலையில் மீண்டும் ஒரு திருமண நிகழ்ச்சிக்குத் தங்க நிறச் சேலையில் சென்றிருக்கிறார்.

சிரஞ்சீவி தன் மனைவி சுரேகா உடன் வந்திருந்தார். நாகார்ஜுனா, அவரின் மனைவி அமலா அகினேனி, நடிகர் வெங்கடேஷ் டகுபாட்டி, பாலிவுட் நடிகர்களான அனில் கபூர், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் அவந்திகா, ஷ்ரவனை வாழ்த்த வந்திருந்தார்கள்.

குஷ்பு, மணமக்களின் புகைப்படங்களை ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். ‛‛எங்கள் அருமை மகள் அவந்திகா - ஷ்ரவன் திருமணம் ஜூன் 25ஆம் தேதி குடும்பத்தினர் மற்றும் அன்பான நண்பர்கள் சூழ நடந்தது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். இந்த அழகிய பயணத்தை தொடங்கும் அவர்களுக்கு உங்கள் ஆசிகளையும் நல்வாழ்த்துகளையும் கோருகிறோம்,” என அந்தப் பதிவில் குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்