தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரையுலகிலும் 9-5 வேலை நேரம் வேண்டும்: ரா‌ஷ்மிகா

2 mins read
6dfb0641-3e32-42ec-ba24-f05f61b95260
‘தி கேர்ள்ஃபிரண்ட்’ படத்தில் ரா‌ஷ்மிகா. - காணொளிப் படம்: யூடியூப்
multi-img1 of 2

ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ படம் வரும் நவம்பர் மாதம் ஏழாம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

அப்படத்தின் வெளியீட்டை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில், அண்மையில் நடிகைகளின் வேலை நேரம் குறித்த விவாதங்கள் சமூக ஊடகத் தளங்களில் நடந்து வருவதைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார் ரா‌ஷ்மிகா.

அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கே.என்., “வேலை நேரத்தைப் பற்றி எந்தக் கோரிக்கையும் வைக்காத ஒரே நடிகை இவர்தான். நேரம் பார்க்காமல் வேலை பார்ப்பவர்,” என ரா‌ஷ்மிகாவைப் பாராட்டியிருந்தார்.

உடனே இடைமறித்த நடிகை ரா‌ஷ்மிகா, “நான் அதிகமாகவே வேலை செய்கிறேன். ஆனால், அதை யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். அவ்வாறு தொடர்ந்து செய்யமுடியாது.

“எட்டு மணி நேரத்திற்குமேல் வேலைபார்ப்பது நமது உடல்நலத்தைக் கெடுத்துவிடும். இந்த அதிக நேர வேலையைத் தவிர்க்கவில்லை என்றால் பின்னர் நாமே வருந்த வேண்டியது வரும். உடல்நலமும் மனநலமும் கெட்டுப்போகும்,” என்றார்.

குடும்பத்துடன் நேரம் செலவிட விருப்பம்

“அலுவலகங்களில் காலை 9 முதல் மாலை 5 வரை என்று வேலை நேரம் உள்ளதுபோல், திரைத் துறையிலும் நமக்கு அப்படியே இருக்கவேண்டும். அப்படியில்லாததால் மறுப்பு சொல்ல முடியாமல் நான் பல வேலைகளைச் செய்கிறேன்.

“இருப்பினும், நான் என் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நேரம் ஒதுக்க விரும்புகிறேன். குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். தூக்கமும் உடற்பயிற்சியும் அவசியம். எதிர்காலத்தை எண்ணி நான் இப்போது கவனம் செலுத்த வேண்டும்,” என்று விரிவாகப் பேசியுள்ளார் ராஷ்மிகா.

கடந்த சில ஆண்டுகளாகப் பல மொழிகளிலும் முன்னணி நாயகியாகத் திகழ்ந்து வருகிறார் ராஷ்மிகா. தெலுங்கில் நட்சத்திர நடிகையாக விளங்கும் இவர், தமிழிலும் இந்தியிலும் வெற்றிப் படங்களை அளித்தவர்.

விஜய் நடிப்பில் 2023ஆம் ஆண்டு வெளியான ‘வாரிசு’ படத்தில் ரா‌ஷ்மிகாதான் கதாநாயகி. அல்லு அர்ஜுன் நடித்து மாபெரும் வெற்றிகண்டுள்ள ‘பு‌ஷ்பா’ வரிசைப் படங்களிலும் அவரே கதாநாயகியாக அசத்தியுள்ளார்.

அண்மைக் காலமாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவரும் ருக்மிணி வசந்தும் பல மொழித் திரைப்படங்களில் நடித்து, ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்