நடிகர் ஆதி மீண்டும் தமிழ்ப் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
சூட்டோடு சூடாக, கார்த்தி நாயகனாக நடிக்கும் ‘மார்ஷல்’ படத்தில் ஆதியை வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அறிவழகன் இயக்கிய ‘ஈரம்’ படத்தில் நடித்து, தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த ஆதி, கடைசியாக ‘சப்தம்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர், தெலுங்குத் திரையுலகில் கவனம் செலுத்திய அவர், தற்போது தெலுங்கில் ‘அகாண்டா-2’, ‘தாண்டவம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில் உருவாகும் ‘மார்ஷல்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் நிவின் பாலியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது ராகவா லாரன்சின் ‘பென்ஸ்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் நிவின் பாலி.
எனவே, அவரால் ‘மார்ஷல்’ படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. இதையடுத்து, ஆதியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இப்படத்தில் கார்த்தி ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.