காதல், ஆன்மிகம் கலந்த ‘ஆலன்’ சிங்கப்பூரில் வெளியானது

காதல், ஆன்மிகம் கலந்த ‘ஆலன்’ சிங்கப்பூரில் வெளியானது

3 mins read
‘ஆலன்’ என்பதற்குப் படைப்பாளி எனப் பொருள்படும். எழுத்துலகில் முத்திரை பதிக்கப் போராடும் கதாநாயகர், இயக்குநர் சிவாவின் எழுத்தாசையையும் பிரதிபலிக்கிறார்.
8ecfc841-0cc2-4aa5-8f6e-939046871e9b
‘ஆலன்’ திரைப்படம் அக்டோபர் 26 சனிக்கிழமை இரவு 9 மணிக்கு ‘கார்னிவல்’ திரையரங்கில் மீண்டும் திரையிடப்படும். - படம்: ஆலன் திரைக்குழுவினர்

சிங்கப்பூர் சார்ந்த ஆர்.சிவாவின் கதை, இயக்கம், தயாரிப்பில் சென்ற வாரம் வெளியான ‘ஆலன்’ திரைப்படம், இரு காட்சிகளாக வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையன்று கார்னிவல் திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

படத்தைக் காண சுமார் 120 பேர் வந்திருந்தனர்.

சிங்கப்பூரில் ஆலன் திரைப்படத்தைக் காண வந்தவர்களில் சிலர்.
சிங்கப்பூரில் ஆலன் திரைப்படத்தைக் காண வந்தவர்களில் சிலர். - படம்: ஆர்.சிவா

‘ஆலன்’ திரைப்படத்தில் கதாநாயகர் (நடிகர் வெற்றி), வாழ்வின் திருப்பங்களால் ஆன்மிகம், எழுத்து, காதல் என மூன்று உலகங்களுக்குள் ஈர்க்கப்படுகிறார். அனைத்தையும் மீறி தம் எழுத்து, காதல் பயணங்களில் அவர் வெற்றியடைகிறாரா என்பதே கதைக் கரு.

குடும்பமாகப் பார்க்கக்கூடிய ஒரு ‘ஃபீல் குட்’ படம் என சிங்கப்பூரில் திரைப்படத்தைக் கண்டவர்கள் கருத்துரைத்துள்ளனர்.

இமயமலை, கன்னியாகுமரி, காசி எனப் பலதரப்பட்ட இடங்களில் நடந்துள்ள படப்பிடிப்பு, திரைப்படத்துக்கு மெருகேற்றியுள்ளதாகக் கூறியுள்ளனர்.

நடிகர் வெற்றியின் முதல் காதலியாக நடித்த ஜெர்மானிய நடிகை மதுரா, அவரை எழுத்தாளர் ஆக ஊக்குவிக்கிறார்.
நடிகர் வெற்றியின் முதல் காதலியாக நடித்த ஜெர்மானிய நடிகை மதுரா, அவரை எழுத்தாளர் ஆக ஊக்குவிக்கிறார். - படம்: ஆலன் திரைக்குழுவினர்

வர்த்தக நோக்குடன் எடுத்த படமல்ல

கட்டுமானத் துறையில் வர்த்தகம் நடத்திவரும் இயக்குநர் சிவாவிற்கு தமிழ் எழுத்து மீது ஒரு தனிப்பட்ட மோகம் உள்ளது.

அவர் திரைப்படத் துறையில் சாதிப்பது பெரிய விஷயம் எனப் பாராட்டினார் ‘8 பாய்ண்ட் எண்டர்டெய்ன்மண்ட்’ நிர்வாக இயக்குநரும் சந்திர மஹால், சூரிய மஹால் உணவக உரிமையாளரும் திரைப்படத் தயாரிப்பாளரான அருமைச்சந்திரன்.

“திருப்புமுனைகள் நன்றாக இருந்தன. சிவா தாமே ஓர் எழுத்தாளர் என்பதால் கதைக்குத் தேவையான உணர்ச்சிகளை புகுத்தியுள்ளார். பலரும் வர்த்தக நோக்குடன் திரைப்படம் செய்யும்போது, இவர் பற்றுக்காக செய்கிறார்,” என அவர் பாராட்டினார்.

“1980, 1990களில் ஓர் எழுத்தாளரின் வாழ்வைச் சித்திரித்ததால் திரைப்படம் சற்று மிதமாகச் சென்றது. உட்கார்ந்து பொறுமையாகப் பார்த்தால் படம் நன்றாக இருக்கும்.

“கதாநாயகர் காந்தியவாதியாகப் பழிவாங்காதது சிறந்ததொரு கருத்து,” என்றார் திரைப்படத்தை நண்பர்களோடு காணச் சென்ற வீரமலை.

‘பண்பார்ந்த திரைப்படம்’

“அடிதடியுடன் இளையர்களைத் தவறான வழியில் இட்டுச் செல்லும் திரைப்படங்களின் மத்தியில், மக்களுக்குப் பண்பார்ந்த திரைப்படத்தை வழங்கியுள்ளார் சிவா. இரண்டாம் பாதி வேகமாகச் சென்றது,” என்றார் அரிச்சந்திரன்.

“நூல்களை எழுதவேண்டும் என்ற கருத்து எனக்குப் பிடித்திருந்தது. நன்றாக நடித்துள்ளார்கள். ஹரி‌ஷ் பேரடி, கருணாகரன் போன்ற தெரிந்த நடிகர்களுடன் இனிய இசையும் திரைப்படத்துக்கு வலுசேர்த்துள்ளது,” என்றார் குடும்பத்துடன் வந்திருந்த சுரே‌ஷ்.

“முதல் பாதி நன்றாகத் தொடங்கி பின்பு மெதுவடைந்தது. இரண்டாம் பாதி நன்றாக இருந்தது. வெவ்வேறு கதைகள் பிணையும் தருணமும் இறுதிக்கட்டமும் சிறப்பாக இருந்தன,” என்றார் ராகே‌ஷ் கண்ணா.

‘நூலாகவும் வெளியாகும்’

இதையடுத்து, திரைப்படத்தின் கதையை நூலாகவும் டிசம்பரில் வெளியிடவுள்ளதாகக் கூறியுள்ளார் இயக்குநர் சிவா.

முதலாளிக்கு விசுவாசமாக இருக்கும் ஏழையின் கதையைச் சித்திரிக்கும் ‘காரோட்டியின் காதலி’ எனும் 2022ல் வெளியான திரைப்படத்தையும் இயக்கியவர் சிவா. அதற்குப் பல விருதுகள் கிடைத்தன.

இவ்வாரமும் கார்னிவல் திரையரங்கில் படம் திரையிடப்பட வாய்ப்புள்ளதாக சிவா கூறினார்.

கதைக் கரு

12 வயதிலிருந்து 40 வயது வரை ஓர் எழுத்தாளரின் பயணத்தைப் பல திருப்பங்களுடன் கூறுகிறது ‘ஆலன்’ திரைப்படம். சிறுவயதில் நடந்த துயரச் சம்பவத்தால் ஆன்மிகப் பாதையில் செல்லும் தியாகு (நடிகர் வெற்றி), பல ஆண்டுகளுக்குப் பிறகு அதைக் கைவிட்டு எழுத்துலகினுள் செல்கிறார். இரண்டாம் முறையாகக் காதல் வசப்படுகிறார். பல இன்னல்களைத் தாண்டி தம் எழுத்து, காதல் பயணங்களில் வெற்றியடைகிறாரா என்பதே கதை.

இத்திரைப்படம் இவ்வார இறுதியிலும் திரையேற வாய்ப்பு உள்ளது.

குறிப்புச் சொற்கள்