சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் 2002ல் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நடிகர் அபிநய், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், திங்கட்கிழமை (நவம்பர் 10) காலை தமது வீட்டில் காலமானார். இவருக்கு வயது 44.
அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து ‘ஜங்ஷன்’, ‘சிங்காரச் சென்னை’, ‘பொன்மேகலை’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்திருந்தார்.
அபிநய்க்கு ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால், பொருளியல் நெருக்கடியைச் சமாளிக்க பல திரைப்படங்களில் டப்பிங் கலைஞராக பணியாற்றினார். விஜய் நடிப்பில் 2012ல் வெளியான ‘துப்பாக்கி’ திரைப்படத்தில் வில்லனுக்கு அபிநய்தான் குரல் கொடுத்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு திரைத்துறையில் வாய்ப்பு கிடைக்காததால் வறுமையின் கோரப்பிடியில் சிக்கினார். ‘அம்மா’ உணவகத்தில் சாப்பிட்டு வந்ததாக பேட்டி ஒன்றில் இவர் கூறியிருந்தார்.
தமது திரைப் பயணத்தில் சரியான கதைகளைத் தேர்வு செய்யாததால் தொடர் தோல்விகளை சந்தித்ததாகவும் இதனாலேயே வாய்ப்புகள் கிடைக்காமல் போனதாகவும் கூறியிருந்த அபிநய், தம் தாயாரின் இறப்பு தம்மை மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கியதாகவும் சொல்லியிருந்தார்.
இவ்வாறு அபிநய், வாழ்க்கையில் தொடர் போராட்டங்களைச் சந்தித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன், இவருக்குக் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு உடல் மெலிந்து காணப்பட்டார். அப்போது கே.பி.ஒய். பாலா இவருக்கு உதவிக்கரம் நீட்ட நேரடியாகச் சென்று பணம் வழங்கினார். கடைசியாக, அபிநய் கலந்துகொண்ட திரை நிகழ்ச்சி கே.பி.ஒய் பாலாவின் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.
சிகிச்சை பெற்று வந்த இவர், தாம் தங்கியிருந்த வாடகை வீட்டிலேயே காலமானார்.
மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அபிநய்யின் உடல், திங்கட்கிழமை இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு வடபழனியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக இவரின் உறவினர்கள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை தென்னிந்திய நடிகர் சங்கத்தினரும் கே.பி.ஒய் பாலாவும் முன்னிருந்து நடத்தி வருகின்றனர்.

