அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் தம்பதியர் மீண்டும் திரையில் இணைந்து நடிக்க உள்ளனர். இருவரும் இணையும் புதுப் படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார்.
இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய உள்ளனர் என்று பலவிதமான தகவல்கள் பரவிவரும் நிலையில், இந்த புதுப் படம் குறித்த செய்தி இருவரது ரசிகர்களுக்கும் உற்சாகம் அளித்துள்ளது.
ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில், ‘குரு’, ‘ராவண்’ ஆகிய படங்களில் அபிஷேக், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்துள்ளனர்.
‘இருவர்’ படம் மூலம் ஐஸ்வர்யா ராயை கதாநாயகியாக அறிமுகப்படுத்தியதும் மணிரத்னம்தான்.
இவர் இயக்கிய குரு படத்தில் நடித்த போதுதான் அபிஷேக்கும் ஐஸ்வர்யாவும் காதல்வயப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது கமல் நடிப்பில் ‘தக் லைஃப்’ படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இந்தப் படம் திரைக்கு வந்ததும் மீண்டும் இந்தியில் ஒரு படத்தை தயாரித்து, இயக்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
‘தக் லைஃப்’ வெளியீடு கண்ட பிறகு, இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.