சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘அமரன்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது. அதில், மேஜர் முகுந்த் வரதராஜன் தனது மகளுக்கு பாரதியாரின் ‘அச்சல்லை அச்சமில்லை’ பாடலைக் கற்றுக்கொடுக்கும் காட்சியோடு தொடங்கி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அமரன்’. மறைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு, தீபாவளிக்கு வெளியாக உள்ளது. படத்தின் விளம்பர வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படத்தின் முன்னோட்டக் காட்சி அக்டோபர் 23ஆம் தேதி வெளியானது.
‘அமரன்’ படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. காரணம், படம் நமது இந்திய நாட்டிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
படத்தில் ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும் அவரின் மனைவி இந்து ரெபக்கா வர்க்கீஸாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழாவும் கடந்த 18ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தொடக்கத்தில் மேஜர் முகுந்த வரதராஜன் தனது மகளுக்கு பாரதியாரின் ‘அச்சமில்லை அச்சமில்லை’ பாடலைக் கற்றுக்கொடுக்கும் காட்சியோடு தொடங்குகிறது. அதில் இருந்து இது உண்மைக்கு நெருக்கமாக ரத்தமும் சதையுமாக எடுக்கப்பட்ட படம் என்பது புரிகின்றது. அதுமட்டுமன்றி முதல் காட்சியே இவ்வாறு இருப்பதால் கனத்த இதயத்துடனே முன்னோட்டக்காட்சி முழுவதையும் அணுக முடிகின்றது.
அதன் பின்னர் நேரடியாக ராணுவத் தளவாடம் காண்பிக்கப்படுகின்றது. அங்கு வீரர்கள் பயிற்சி செய்கின்றனர். திடீரென வீரர்கள் தங்கியுள்ள கூடாரத்தின்மீது தீவிரவாதிகளோ அல்லது எதிரிகளோ தாக்குதல் நடத்துகின்றார்கள். அப்போதும் வீரர்கள் தயாராகும் வேகம், அந்த நெருக்கடியிலும் வீரர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் ராணுவ மேஜர் காட்சிகள் புல்லரிக்க வைக்கின்றன.
மேலும் ராணுவம்தான் எனது வாழ்க்கை எனக் கூறும் மகனின் உறுதியும் ‘ஒத்த ஆம்பள புள்ளையும் ஆர்மிக்கு போறேன்னு சொல்ற’ எனும் தாயின் பாசமும் கைத்தட்டல்களைக் குவிப்பது மட்டும் அல்லாமல், நெஞ்சில் நிற்கின்றது.
தொடர்புடைய செய்திகள்
சிவகார்த்திகேயனுக்கும் சாய் பல்லவிக்கும் இடையிலான காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் சாய் பல்லவி, “ராணுவ வீரனின் மனைவியாக இருப்பதில் பெருமைகொள்கிறேன்,” எனக் கூறும்போது கண்ணீர் வரவைக்கிறது.
தீவிரவாத அமைப்புகளை விரட்டி விரட்டி வேட்டையாடும் காட்சிகளில் ‘இந்திய ராணுவத்தின் முகம் இதுதான்,’ என சிவகார்த்திகேயன் பேசும் வசனத்திற்கு திரையரங்குகளில் விசில்களும் கைத்தட்டல்களும் உறுதி.
இறுதிக் காட்சியில் மகள் தனது அம்மாவை நோக்கி “அப்பா பிறந்த நாளுக்கு வருகின்றேன் எனக் கூறினாரே. வருவாரா?” எனக் கேட்டு முடிகின்றது. இந்தக் காட்சியும் குரலும் கண்ணீரை வரவழைக்கின்றது. இப்படித்தான் சிவகார்த்திகேயன் ரசிகர்களை இந்த தீபாவளிக்கு திரையரங்குகளில் அழவைத்து அனுப்பப் போகிறார் என்பதை இப்போதே முன்னோட்டக் காட்சி வழியாக இயக்குநர் காண்பித்துள்ளார்.
‘கோட்’ படத்தில் சிவகார்த்திகேயன் கையில் விஜய் சின்ன துப்பாக்கியைத்தான் கொடுத்தார். ஆனால், கமல்ஹாசனோ பெரிய ‘ஏகே 47’ ரக துப்பாக்கிகளையே கொடுத்து சுட வைத்து அழகு பார்த்துள்ளார். ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் சரிப்படுவாரா என கிண்டல் செய்த பலருக்கும் அவரது அர்ப்பணிப்பு மூலமாகவே பதிலடி கொடுத்துள்ளார்.
வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் ‘அமரன்’, ‘பிரதர்’, ‘ப்ளடி பெக்கர்’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின்றன.
இதில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் ‘அமரன்’ படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்கும் எனக் கூறுகின்றனர். சிறப்புக் காட்சி உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கிடைத்து வசூல் வேட்டையை ‘அமரன்’ திரைப்படம் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் நெப்போலியன் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியைப் பாராட்டியுள்ளார். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் மத்திய பகுயான திருச்சியிலிருந்து சிவகார்த்திகேயன் நடிக்க வந்துள்ளதைப் பாராட்ட வேண்டும். சிவகார்த்திகேயனுக்கு மற்றவர்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், சினிமாவில் ஆரோக்கியமான போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இன்றைக்கு சிவகார்த்திகேயன் நடித்த படம் முன்னணி நடிகர்களின் படத்துக்கு சமமாக உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள நெப்போலியன், மற்றவர்கள் அதைவிட சிறந்த படத்தை கொடுக்க முயற்சி செய்யவேண்டும்.
அதை விட்டுவிட்டு சிவகார்த்திகேயன் மீது பொறாமைப்படுவது, இழிவாகப் பேசுவது சரியல்ல என்றும் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய மகன் தனுஷின் திருமணத்தில் மும்முரமாக இருந்தபோதிலும் சிவகார்த்திகேயனுக்காக நெப்போலியன் குரல் கொடுத்துள்ளது அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.