எதிர்பாராத விதமாக இசையமைப்பாளரானேன்: சாம் சி எஸ்

3 mins read
20c827ef-5a87-43bc-9efa-6f27ec19bc4a
சாம் சி எஸ். - ஆர்எஸ்பிஎன்
multi-img1 of 3

பாடலாசிரியர் ஆக வேண்டும் என்பதுதான் தனது ஆசையாக இருந்தது என்கிறார் இசையமைப்பாளர் சாம் சி எஸ். ஆனால், எதிர்பாராதவிதமாக, தான் இசையமைப்பாளர் ஆகிவிட்டதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சிறு வயதில் எனக்கு இசையில் ஆர்வம் இருந்தது. பள்ளி, கல்லூரியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடுவேன். ‘கீ போர்ட்’ வாசிப்பேன்.

“தாத்தாவிடம் ஓர் ஆர்மோனியப்பெட்டி இருந்தது. ஒருமுறை இளையராஜா மூணாறு வந்தபோது அதைத் தொட்டு வாசித்தாராம். இத்தத் தகவலைக் கேள்விப்பட்டதும் அந்த ஆர்மோனியப் பெட்டியின் மீது பெரும் ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் வாசிக்கத் தெரியாது என்பதால் அமைதியாக இருந்தேன்.

“படிப்பு முடிந்ததும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்தபோது அந்நிறுவன உரிமையாளர் ஓர் இசைத்தொகுப்பை உருவாக்க விரும்பினார். அதில் பாடல் எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் எழுதிக் கொடுத்த பாடல்களுக்கு இசையமைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் நானே அப்பாடல்களுக்கு மெட்டமைத்து பாடிக்காட்டினேன்,” என்கிறார் சாம்.

பாடலைக் கேட்ட தயாரிப்பாளருக்கு அவற்றின் வரிகளும் இசையும் மிகவும் பிடித்துப்போனதாம். தனக்கு இசையமைக்கவும் வரும் என்பதை அன்றுதான் சாம் கண்டறிந்துள்ளார்.

அதன் பின்னர் இசையில் கூடுதல் கவனம் செலுத்திய அவருக்கு, ‘ஓர் இரவு’, ‘அம்புலி’, ‘கடலை’ போன்ற குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் அமைந்தன.

புஷ்கர் காயத்ரி இயக்கிய ‘விக்ரம் வேதா’ படம்தான் சாமுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. கதையைக் கேட்டதுமே அந்தப் படம் தனது வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கும் என்று தன் மனத்தில் தோன்றியதாகச் சொல்கிறார் சாம்.

இப்போதும்கூட புஷ்கர் காயத்ரியுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றுடன் இந்திப் படங்களுக்கும் இசையமைக்கிறார் சாம்.

இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட இவருக்கு மலாய், வியட்நாமியப் படங்களிலும் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறதாம்.

“இந்திய அளவில் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்த படம் ‘கைதி’. ஒரே இரவில் நடக்கும் கதைக்குச் சிறப்பாக இசை அமைத்திருப்பதாக எல்லாரும் பாராட்டினார்கள். ‘கைதி’ படத்தின் மலாய்ப் பதிப்புக்கும் நான்தான் இசையமைத்தேன்.

“இயக்குநர் ராம்குமார் ‘பார்க்கிங்’ படத்தின் கதையைக் கூறியபோது இந்தப் படத்துக்கு நிச்சயமாக இசையமைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. நான் மனநிறைவுடன் பணியாற்றிய படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி,” என்று உற்சாகத்துடன் கூறும் சாம், தற்போது இந்தியில் மட்டுமே ஐந்து படங்களில் பணியாற்றி வருகிறாராம்.

தமிழில் ‘சர்தார்-2’, எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம், ரவி மோகனின் ‘கராத்தே பாபு’, இயக்குநர் மிஷ்கினும் கீர்த்தி சுரேஷும் இணைந்து நடிக்கும் படம், ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘இம்மார்ட்டல்’, ‘புல்லட்’ எனப் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

திரைப்படங்களுக்கு இசையமைப்பதைவிட தனிப்பட்ட இசைத் தொகுப்புகளை வெளியிடுவதில்தான் இவருக்கு ஆர்வம் அதிகமாம். காரணம், அதன் மூலம் வித்தியாசமான இசைப் படைப்புகளை உருவாக்க முடியும் என்கிறார்.

குடும்பம் குறித்து?

“என் அம்மா, அப்பா, நான், இரண்டு மூத்த சகோதரிகள் ஆகியோர் அடங்கிய குடும்பம். அம்மாவும் ஒரு அக்காவும் காலமாகிவிட்டனர். இன்னொரு சகோதரி மதுரையில் இருக்கிறார்.

“நான், என் மனைவி, மகன் ஆகிய மூவரும் சென்னையில் இருக்கிறோம். இதுதான் என்னுடைய உலகம். மேலும் இசை ரசிகர்கள் எல்லாருமே என்னுடைய குடும்பத்தினர்தான்,” என்றும் தமது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் சாம்.

குறிப்புச் சொற்கள்