இயக்குநர் ராஜ துரை சிங்கம் எழுதி, இயக்கியுள்ள ‘சிங்கா’ படத்தில் நாயகனாக நடித்த அனுபவம் சவால்மிக்கதாய் இருந்ததாக நடிகர் கயல் சந்திரன் பகிர்ந்துள்ளார்.
“சிங்கா படம் எனக்கு பல்வேறு உணர்வுபூர்வமான அனுபவங்களையும், மகிழ்ச்சியான தருணங்களையும் தந்த அழகான பயணமாக அமைந்தது. இப்படத்தின் கதை வெறும் நாயைப் பற்றிய கதை மட்டுமல்ல. அன்பு, பிணைப்பு, தேடல், நம்பிக்கை போன்ற மனிதனின் மனநிலைகளையும் செல்லப்பிராணிகளின் தூய உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக நாயுடன் இணைந்து நடித்தது மிகவும் சவாலாக இருந்தது.
“பொதுவாக நாய்களும், குழந்தைகளும் நீண்ட நேரம் கட்டுப்பாட்டில் இருக்கமாட்டார்கள். அதனால் பொறுமை எந்த அளவுக்கு அவசியம் என்பதை ஆழமாக உணர்ந்தேன்.
“அந்தக் கடினமான தருணங்களை இயக்குநர் பொறுமையுடன் கையாண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘சிங்கா’ என்னை கவர்ந்தது போல நிச்சயம் ரசிகர்களையும் கவர்வான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
“படப்பிடிப்பின்போது நாயின் அன்பை உணர்ந்தபோது என்னுள் தோன்றியது, மனிதர்களும் செல்லப்பிராணிகளான நாய்களைப் போல் பரிசுத்தமான அன்பைப் பகிர்ந்து வாழ்ந்தால் இந்த உலகம் இன்னும் அழகாக இருக்கும் என்பதுதான்,” என்று கயல் சந்திரன் கூறினார்.
‘சிங்கா’ படத்தில் மலையாள நடிகைகள் சிஜா ரோஸ், மீனாட்சி ரவிந்திரன் ஆகியோர் நாயகிகளாகவும் ஆதித்யா கதிர், சூப்பர் குட் சுப்ரமணி, டிஎஸ்ஆர், மலையாள நகைச்சுவை நடிகர் அரிஸ்டோ சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.