இயக்குநர் பாலா குறித்து வெளியான பல தகவல்கள் உண்மைக்கு முரணானவை என்கிறார் இளம் நாயகி ரோஷினி பிரகாஷ்.
பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். அந்த வகையில் தாம் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்கிறார் ரோஷினி.
“பாலாவின் படங்கள் எப்போதுமே சோகத்தை ஏற்படுத்தும் என்று சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் நான் இது குறித்தெல்லாம் கவலைப்படவே இல்லை.
“இந்தியாவின் ஆகச்சிறந்த இயக்குநர்களில் பாலாவும் ஒருவர்.
“எனவே, அவர் எனக்கு எத்தகைய கதாபாத்திரத்தை அளிக்கப்போகிறார் என்பதை அறிவதில் மட்டுமே ஆர்வமாக இருந்தேன்.
“ரசிகர்கள் என்றும் நினைவில் வைத்திருக்கும் வகையில் ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது. பாலா படத்தில் நடித்தால் இந்த இலக்கை எளிதில் அடைய முடியும் என்பது உறுதி,” என்கிறார் ரோஷினி.
‘வணங்கான்’ படத்தில் ‘டினா’ என்ற ஜாலியான, குறும்புத்தனம் நிறைந்த இளம் பெண்ணாக நடித்துள்ளார் இவர். கன்னியாகுமரியில் நடக்கும் கதை என்பதால் படப்பிடிப்புக்கு முன்பு அங்கு சென்று சில நாள்கள் தங்கியிருந்தாராம்.
“வட்டார மொழியில் பேசி நடிக்க வேண்டும் என்பதால் எனக்காக சில பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், அங்குள்ள தெருக்களில் நாள்தோறும் நடந்துசென்று உள்ளூர் மக்களின் பேச்சு, உடல்மொழியைக் கவனித்தேன்.
“இதனால் எனது கதாபாத்திரத்தை நன்கு மெருகேற்ற முடியும் என்று பாலா அறிவுரை கூறியிருந்தார். என்னைப் பொறுத்தவரை சீரியஸான கதாபாத்திரத்தைவிட குறும்புத்த்தனமுள்ள பெண்ணாக நடிப்பதுதான் இன்னும் கடினமானது என்பேன்.
“எப்படியோ பாலா இயக்கத்தில் நடித்ததை எனது வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்,” என்கிறார் ரோஷினி.
‘வணங்கான்’ படத்தில் சூர்யா, மமிதா பைஜு, கிரித்தி ஷெட்டி ஆகியோர்தான் முதலில் ஒப்பந்தமாகி இருந்தனர். சில காரணங்களால் அவர்கள் விலகியதை அடுத்து, அருண் விஜய், ரோஷினியை நடிக்க வைத்திருக்கிறார் பாலா.
படப்பிடிப்பின்போது பாலா கடுமையாக நடந்து கொண்டார், இதனால் சூர்யா வருத்தம் அடைந்தார் என்றெல்லாம் தகவல்கள் பரவின. ஆனால், ரோஷினியோ இவை அனைத்தும் பொய் தகவல்கள் என்பதை தனது சொந்த அனுபவத்தின்மூலம் கண்டறிந்ததாகச் சொல்கிறார்.
“எனக்கு நெருக்கமான சிலர்கூட உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கேள்விப்பட்டதால் எனக்காகக் கவலை அடைந்தனர். ஆனால் எல்லாமே பொய் என்பதை நேரடியாகப் பார்த்தபோது புரிந்துகொண்டேன்.
“பாலா மிகவும் அமைதியான மனிதர். எதையும் நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என விரும்புபவர். சிறு விஷயங்களைக்கூட உன்னிப்பாகக் கவனிப்பார். நம்மிடமும் அதே நேர்த்தியை எதிர்பார்ப்பார்.
“ஏனெனில் படப்பிடிப்பு தேவையின்றி நீளும்போது தயாரிப்பாளருக்கு ஏற்படும் நஷ்டம் குறித்து அவர் மிகுந்த கவலைகொள்வார். நம்மிடம் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்றால்தான் சிக்கல் தொடங்கும்,” என்கிறார் ரோஷினி.
ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு விருப்பம் இல்லையாம். தனது பெயர் ஒரு திரைப்படத்தில் இடம்பெறுகிறது எனில், ‘ரோஷினி ஏதாவது வித்தியாசமாகச் செய்திருப்பார்’ என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் படம் பார்க்க வேண்டும் என்பதே ரோஷினியின் விருப்பமாக உள்ளது.
“கதை, கதாபாத்திரங்கள் குறித்து நாம் பலவிதமாகப் பேசலாம், கருத்துகளை வெளிப்படுத்தலாம். ஆனால், ஒரு படத்தின் வெற்றி, அதில் நடித்தவர்களின் வெற்றி என்று கூறப்படுவதையும் மனதிற் கொண்டுதான் படங்களைத் தேர்வு செய்கிறேன்,” என்று ஓர் அனுபவசாலியைப் போல் பக்குவமாகப் பேசுகிறார் ரோஷினி.