“அப்பாவைப் பிரிந்து என் அம்மா மும்பை வந்தபோது நானும் என் தங்கையும் அவருடன் இருந்தோம். அப்போது எதிர்கொண்ட சிரமங்கள்தான் வாழ்க்கை பற்றிய புரிதலை ஏற்படுத்தியது,” என்கிறார் நடிகை ஷ்ருதிஹாசன்.
அம்மா சரிகாவுடன் மும்பையில் குடியேறியபோது வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும் எங்கு சென்றாலும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திய அந்த நாள்களை மறக்க முடியாது என்றும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“இன்று மும்பையில் என் சொந்த வீட்டில் சுகமாக வாழ்கிறேன். நான் சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு அப்பாவிடம் இருந்து சல்லிகாசுகூட எதிர்பார்த்ததில்லை. சில சமயங்களில் வீட்டுத் தவணைக்கான தொகையை கட்ட காசு இல்லாமல் இருந்திருக்கிறேன். அப்போதுகூட அப்பாவிடம் பணம் கேட்டதில்லை.
“நான் அப்பா சாயல் என்றால் தங்கை அக்ஷரா அம்மா சாயல். குணங்களும்கூட அப்படித்தான்,” என்று கூறியுள்ளார் ஷ்ருதிஹாசன்.
இவரும் தங்கை அக்ஷராவும் நல்ல தோழிகளைப்போல் பேசிப் பழகுவார்களாம். எனினும் எந்த விஷயத்திலும் அவரவர் விருப்பப்படித்தான் முடிவு எடுக்கிறார்கள். தங்கையைப் போல் தம்மால் உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முடியாது என்கிறார் ஷ்ருதி.
தொடக்கத்தில் நடிப்பைவிட பாட்டும் இசையும்தான் தம்முடைய முதன்மை விருப்பமாக இருந்தன என்றும் தற்போது நடிப்புதான் தனது முதன்மை விருப்பம் என்றும் அதுதொடர்பான கனவுகளை இன்னமும் கலையாமல் பார்த்துக்கொள்வதாகவும் சொல்கிறார்.
“திரையுலகில் எனக்கு நெருக்கமான நண்பர்கள் என யாரும் இல்லை. ஆனால் என் மீது அக்கறை கொண்டவர்கள் அதிகம்.
“படப்பிடிப்பில் என்னை ஒரு நடிகையாக நான் கருதுவதில்லை. மற்றவர்களுக்கு நானும் ஒரு சக தொழிலாளி, அவ்வளவுதான்.
தொடர்புடைய செய்திகள்
“நடிப்பு தவிர எனக்குத் தெரிந்த, என்னால் முடிந்த எந்த வேலையாக இருந்தாலும் அதைச் செய்வேன்,” என்று கூறியுள்ள ஷ்ருதிஹாசன், தமிழில் சூர்யாவும் தனுஷும்தான் தனக்கான சிறந்த சக நடிகர்கள் என்கிறார்.
‘ஏ ராம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தது போக, கடந்த 17 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் ஷ்ருதி. அவற்றுள் 10 மட்டுமே தமிழ்ப் படங்கள். இன்னும் மூன்று வாரங்கள் கடந்துவிட்டால், ஷ்ருதிக்கு 40 வயதாகிவிடும்.
“இன்னும்கூட வயதுக்கு ஏற்ற பக்குவம் வந்தது போல் தெரியவில்லை. பல விஷயங்களில் இன்னும் குழந்தையாகத்தான் இருக்கிறேன்.
“அறிவுக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லை என்பதை அப்பாவைப் பார்த்து தெரிந்துகொண்டாலும் என் அனுபவத்தில்தான் முழுமையாக உணர்ந்து கொண்டேன்.
“அப்பாவைப்போல் எனக்கும் தொடக்கத்தில் கடவுள் பக்தி இல்லை. ஆனால், வாழ்க்கையில் நான் நினைத்ததற்கு மாறாக நடந்த அனைத்துமே நம் நன்மைக்குதான் நடந்திருப்பதாக பிற்காலத்தில் உணர்ந்தபோது கடவுள் நம்பிக்கை எனக்குள் தானாக வந்துவிட்டது,” என்று அந்தப் பேட்டியில் மனம் திறந்துள்ளார் ஷ்ருதிஹாசன்.

