சிம்ரனுடன் நடித்தது ஆனந்தமான அனுபவம்: சசிகுமார்

2 mins read
df7b1dd9-f7a4-450f-a2cf-1a7e76ae4c25
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ விரைவில் வெளியாகிறது. திரையுலகில் கால் பதித்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு பொறுப்புகளைச் சுமந்த பழுத்த அனுபவசாலியாக உருவெடுத்துள்ளார் சசி.

அவருக்கென உள்ள ரசிகர்களுடன், முன்னணி நடிகர்களின் ரசிகர்களும்கூட சசிகுமாரின் படங்களைப் பார்த்து ரசிக்கிறார்கள் என்பதுதான் அவரது பலம்.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சசிகுமார் இப்போது குடும்பத் தலைவனாக அவதாரம் எடுத்திருப்பது மில்லியன்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

‘‘இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இந்தக் கதையைச் சொல்லும்போதே அபாரமான நேர்த்தி இருந்தது. இத்தனை ஆண்டுகளாக மக்கள் என்னை திரையில் விரும்பிப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு படத்திற்கும் அந்தக் கதைக்கு தேவைப்படுவதைவிட அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது.

“இப்போது ஒரு குடும்பத்தின் மூத்த பையன் என்பதுபோன்ற ஒரு பொறுப்பு என் தோளில் அமர்ந்திருக்கிறது. அது நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்கிற பொறுப்பு. நிச்சயமாக அதற்குத் தகுதியாக இந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இருக்கும். என் மனத்துக்கு நெருக்கமான படமாக உருவாகியிருக்கிறது,” என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் சசிகுமார்.

இது வெகுஜன சந்தை என்பதால் மக்களுக்குப் பிடித்ததை கவனமாகச் செய்ய வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஒரு நடிகனாக அது எளிமையான பணியல்ல என்று தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நம்மால் ஏற்றுச் செய்ய முடியும் எனும் நம்பிக்கை வர வேண்டும். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மிக மகிழ்ச்சியாக உள்ள ஒரு குடும்பத்திற்கான கதை.

“இது நகைச்சுவையுடன் கூடிய, குடும்பத்துடன் அமர்ந்து இயல்பாகப் பார்க்கக்கூடிய படம். இதில் 16 வயது பையனுக்குத் தந்தையாக நடித்துள்ளேன். சிம்ரன் எனக்கு ஜோடியாக நடித்திருப்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. நூறு படங்களுக்கு மேல் நடித்தவர். அவரது அழகை திரையில் பார்த்து ரசித்திருக்கிறோம். அவருடன் இணைந்து நடித்தது ஆனந்தமான அனுபவம்,” என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் சசிகுமார்.

குறிப்புச் சொற்கள்