பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அதிரடித் திரைப்படமான ‘பிளாஸ்ட்’ மே 28ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் அர்ஜுன் சர்ஜா, பிரித்தி முகுந்தன், அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் முன்னாள் உதவியாளரும் அறிமுக இயக்குநருமான சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’, தற்காப்புக் கலைகளில் தலைசிறந்து விளங்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் கதையை விவரிக்கிறது.
வருண் தயாளன் (ஜான் கொக்கன்) தலைமையிலான குண்டர் கும்பலை இந்தக் குடும்பம் எதிர்கொள்ளும்போது, அவர்களின் வாழ்க்கை எப்படிப்பட்ட ஆபத்தான திருப்பங்களைச் சந்திக்கிறது என்பதே படத்தின் மையக்கதை.
‘ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பில் உருவாகியுள்ள அப்படத்தின் தனித்துவமான கதைக்களம், படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட நட்புறவு குறித்து அர்ஜுனும் பிரித்தியும் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்தனர்.
அப்படத்தில் குடும்பத் தலைவரான ராஜாராமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன், “இயக்குநர் சுபாஷ் இக்கதையைக் கூறியபோது, குடும்ப விழுமியங்களுடன் இணைந்த அதிரடிக் காட்சிகள் என்னை மிகவும் கவர்ந்தன. திரையில் மீண்டும் வாளை ஏந்தி, அதிநவீன தற்காப்புக் கலைக் காட்சிகளில் நடித்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது என்றார்.
அர்ஜுனுடன் நடித்தது சிறந்த கற்றல் அனுபவம்: பிரித்தி
அப்படத்தில் அர்ஜுனின் மகளான ‘நிலா’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரித்தி முகுந்தன், தென்னிந்தியத் திரையுலகின் ஆக மூத்த கலைஞர் ஒருவருடன் இணைந்து பணியாற்றியது தனக்கு ஒரு வளமூட்டும் கற்றல் அனுபவமாக அமைந்தது எனக் கூறினார்.
மேலும், “படப்பிடிப்பின் முதல் நாளில் எனக்கு மிகுந்த பதற்றம் இருந்தது. ஆனால், எனது பதற்றத்தை முற்றிலும் அவர் நீக்கினார். படப்பிடிப்புத் தளத்தில் என்னைச் சொந்த மகள் போலவே நடத்தி, சண்டைக் காட்சிகளுக்கானப் பயிற்சிகளில் எனக்கு வழிகாட்டினார்,” என அவர் தெரிவித்தார்.
தற்காப்புக் கலைப் பயிற்சி சவால்மிக்கதாக இருந்தாலும், அர்ஜுனுடன் இணைந்து நடித்தது எனது நீண்டநாள் கனவு என நெகிழ்ச்சியுடன் கூறினார் பிரித்தி.
தொடர்புடைய செய்திகள்
இணையத்தில் பரவலான சுவரொட்டி
அர்ஜுன் கையில் வாளுடனும் பிரித்தி, அபிராமி ஆகியோர் சம்மட்டியுடனும் இருக்கும் வரைகலை பாணியில் உருவான சுவரொட்டி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
“அந்தச் சுவரொட்டி படத்தின் ஒட்டுமொத்தத் தன்மையையும் துல்லியமாகக் காட்டுகிறது. அபிராமியின் முற்றிலும் மாறுபட்ட பக்கத்தை ரசிகர்கள் இதில் காண்பர்,” என்றார் அர்ஜுன்.
‘கேஜிஎஃப்’ படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ‘பிளாஸ்ட்’ மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
“ரவியின் பின்னணி இசை அதிரடிக் காட்சிகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிப்பதோடு, நமது குடும்பப் பிணைப்பின் உணர்வுகளையும் மேலோங்கச் செய்கிறது,” என்றார் பிரித்தி.
திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு, இப்படம் ‘நெட்ஃபிளிக்ஸ்’ இணையத் தளத்திலும் ஒளிபரப்பப்படவுள்ளது.

