ஜெயம் ரவி என்று அழைக்கப்படும் ரவி மோகனின் தோழி கெனிஷா அதிரடி நடவடிக்கையாக சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.
பாடகி கெனிஷா குறித்து ரவி மோகன் தெரிவிக்கையில், “கெனிஷா வந்தபிறகு எனது வாழ்க்கை மாறி உள்ளது. அவருடன் பயணம் செய்ய விரும்புகிறேன்,” என்று தெரிவித்து இருந்தார். அதிலிருந்து பல சர்ச்சைகள் வெடிக்கத் தொடங்கியது.
அண்மையில் நீதிமன்றமும் “உங்கள் இருவருக்கும் இடையிலான பிரச்சினை குறித்து இனி சமூக வலைத்தளங்களில் அறிக்கை விடக்கூடாது,” என்று ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கெனிஷாவிற்கு இணையம் மூலம் அச்சுறுத்தல்கள் வரத்தொடங்கின.
ஆர்த்தி-ரவி பிரச்சினை ஆரம்பித்ததற்கும் அவர்கள் இப்பாேது பிரிந்து இருப்பதற்கும் காரணம் கெனிஷாதான் என்று பலர் அவரைக் குறைகூறி வந்தனர்.
“நீ நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவளா? குடும்பத்தைப் பிரித்தவள், கணவனைத் திருடியவள்,” என்றெல்லாம் பலர் ஊடகங்களில் காரசாரமாகப் பதிவிட்டு வந்தனர்.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பாடகி கெனிஷா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், “பாலியல் மிரட்டல், ஆபாசப் பேச்சு, கொலை மிரட்டல் விடுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். என்னைப் பற்றி அவதூறாகப் பேச அனுமதிக்க மாட்டேன். சமூக வலைத்தளங்களில் மிரட்டல் விடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்து இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதன்படி, சட்ட ஆலோசகர்கள் குழு சட்ட ரீதியான அறிவிப்பை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளது. “திருமணப் பிரிவினையை விரும்பும் ஒரு பிரபலத்துடன் தவறான தொடர்பில் இருப்பதாகக் கூறி கெனிஷா பிரான்சிஸ் இணையத்தில் குறிவைக்கப்படுகிறார்.
“அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் அனுப்பிய குறுஞ்செய்திகள், பதிவுகளை 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவர்கள் நீக்க வேண்டும். பதிவுகளை நீக்காதவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்,” என்று அந்த சட்டப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.